மும்பை: இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அவர் மே 7 அன்று ஓய்வை அறிவிக்க இருந்ததாகவும், ஆனால் பிசிசிஐ அவரை சில நாட்களுக்குப் பிறகுதான் அறிவிக்க வேண்டும், ஆபரேஷன் சிந்துர் நடக்கும் போது இது போன்ற அறிவிப்பை வெளியிடக் கூடாது என அவரைத் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ரோகித் சர்மா மே 7 அன்று தனது ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அவர் இரவு 7:29 மணிக்கு எம்.எஸ். தோனி அறிவித்த அதே இரவு 7.29 மணிக்கு தனது ஓய்வையும் அறிவித்தார். அது எதிர்பாராத அறிவிப்பாக இருந்தது. அன்றைய தினம் விராட் கோலியும் இரவில் தனது ஓய்வை அறிவிக்க இருந்தார்.

ஆனால், பிசிசிஐ அவரைத் தடுத்து நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. மே 7 அன்று தான் ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் இந்தியாவால் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா மே 7 அன்றைய இரவு ஆபரேஷன் சிந்துர் என்ற தாக்குதல் நடவடிக்கை எடுத்தது.
அந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இரவு ரோகித்தை போன்றே விராட் கோலி ஓய்வை அறிவிக்க இருந்தார். அப்போது பிசிசிஐ தலையிட்டு அவரது ஓய்வு முடிவை சில நாட்களுக்குத் தள்ளி வைக்குமாறு கூறி இருக்கிறது.
ஆனால், அப்போது பிசிசிஐ கோலியின் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதில் உண்மை இல்லை. மாறாக சில நாட்களுக்குப் பிறகு அறிவிக்குமாறு தான் பிசிசிஐ அவருக்கு அறிவுறுத்தியது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விராட் கோலி எதற்காக ஓய்வு பெற்றார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களும் நடந்து வருகின்றன.
பிசிசிஐ அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய சொன்னதாகவும் வந்த தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்பதை அறிந்து தற்போது அவர்கள் மேலும் அதிர்ச்சியில் உள்ளனர். அப்படி என்றால், விராட் கோலிக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து ஓய்வை அறிவிக்க வைத்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் வாய்ப்பு கொடுக்க முடியாது என மறுத்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.