மோடி எக்ஸ் பதிவை ஷேர் செய்து குமுறிய சேவாக்.. திடீரென டெலிட்.. என்ன நடந்தது?
டெல்லி : பொதுத் துறை வங்கிகள் வளர்ச்சி அடைவதாக பிரதமர் மோடி 3 மாதத்திற்கு முன்பு பதிவிட்ட எக்ஸ் தல பதிவை பகிர்ந்த ஷேவாக் அது குறித்து பல்வேறு கேள்விகளையும் குமுறல்களையும் வெளிப்படுத்தினார். ஆனால் அந்த பதிவை போட்ட சிறிது நேரத்திலேயே அதனை சேவாக் டெலிட் செய்து விட்டார்.
பிரதமர் மோடி நாட்டிலுள்ள பொது வங்கிகள் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பது குறித்து கடந்த ஜூன் 19ஆம் தேதி ஒரு சமூக வலைத்தள பதிவை போட்டிருந்தார். இந்த பதிவை தான் தற்போது சேவாக் ஷேர் செய்து தன்னுடைய குமுறல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதில், என்னுடைய ஊழியர் ஒருவர் அவருடைய சொந்த நிலத்தை விற்றதன் மூலம் ஒரு கோடி ரூபாய் கிடைத்ததாக சேவாக் குறிப்பிட்டுள்ளார். அதில் சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு மூன்று பொது வங்கிகளில் பங்குகளை தனது ஊழியர் வாங்கியதாக அவர் கூறியுள்ளார். கனரா வங்கியின் ஒரு பங்கு 120 ரூபாய்க்கும்,பேங்க் ஆப் பரோடாவின் ஒரு பங்கு 286 ரூபாய்க்கும், யூனியன் வங்கியின் ஒரு பங்கு 143 ரூபாய் க்கும் என அந்த நபர் வாங்கியதாக சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பங்குகளை வாங்கிய நபர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் என்றும் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இந்த பதிவை போட்டதை அடுத்து இதனை நம்பி அவர் இந்த மூன்று பொது வங்கிகளின் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததாகவும் சேவாக் கூறியுள்ளார். ஆனால் கடந்த மூன்று மாதத்தில் அவருடைய பங்கின் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்துவிட்டதாகவும் பொது வங்கிகளின் பங்குகள் 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்தால் மட்டுமே தமது ஊழியர் முதலீடு செய்த பணத்தையாவது அவரால் திரும்ப பெற முடியும் என்றும் ஷேவாக் கூறியுள்ளார்.
முதலீடு செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களையும் பொது வங்கியின் பங்குகளை வாங்குமாறு அவர் வலியுறுத்தி இருந்ததாக சேவாக் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் மோடி பொது வங்கிகள் குறித்து போட்ட கருத்துக்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்தும் பொது வங்கிகளின் பங்குகள் கொஞ்சம் கூட உயரவில்லை என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.
நிஃப்டி 10 சதவீதம் வரை உயர்ந்த போதும் பொது வங்கிகளின் பங்குகள் மட்டும் அடி பாதாளத்திற்கு சென்றதாக சேவாக் கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய அரசு வேண்டுமென்றே பொது வங்கிகளை பிரபலப்படுத்துவதற்காக ஒரு தகவல்களை தயாரித்து தனது ஊழியரை அந்த வங்கிகள் மீது முதலீடு செய்து சிக்க வைத்து விட்டதோ என்று தமக்கு தோன்றுவதாக ஷேவாக் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆனால் இன்னும் பிரதமர் மோடியை தமது ஊழியர் நம்புவதாகவும், ஆனால் வர்த்தக சூழல் கொஞ்சம் கூட முன்னேறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சேவாக், இதன் காரணமாக தனது ஊழியர் மிகவும் பயந்து போய் இருப்பதாக கூறியுள்ளார். தனது ஊழியர் அவருடைய பெரும்பாலான பணத்தை முதலீடு செய்து விட்டதால் அவர் கையில் தற்போது ஒன்றும் இல்லை என்றும் ஷேவாக் கூறியுள்ளார்.
பங்குச்சந்தை நிலவரம் குறித்து மத்திய அரசை வெளிப்படையாக விமர்சித்து சேவாக் போட்டிருந்த எக்ஸ் தள பதிவு சிறிது நேரத்திலே சமூக வலைத்தளத்தில் வைரலானது. பிரதமர் மோடியை ஷேவாக் என்றும் விமர்சித்தது கிடையாது. ஆனால் இன்று பங்குச்சந்தையில் தனது ஊழியர் பணத்தை பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவை பார்த்து, முதலீடு செய்து இழந்து விட்டதாக கூறி வெளிப்படையாக போட்ட பதிவு பெரும் சலசலப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஷேவாக் உடனடியாக இந்த பதிவை நீக்கி விட்டார்.


Click it and Unblock the Notifications