இந்தூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக சதம் விளாசினார்.
குறிப்பாக கில் நடப்பாண்டில் மட்டும் ஏழு சதத்தை விளாசி இருக்கிறார். நேற்று ஆட்டத்தில் அவர் 97 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் கில்லை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் மட்டும் அவரை திட்டியிருக்கிறார்.

இது குறித்து பேசிய சேவாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். எனினும் நேற்றைய ஆட்டத்தில் அவர் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார் .ஆனால் கில் இருந்த ஃபார்முக்கு அவர் நிச்சயம் 160 அல்லது 180 ரன்களை அடித்திருக்க வேண்டும் என்று தான் நான் சொல்வேன்.
ஏனென்றால் அவருக்கு 25 வயது தான் ஆகிறது. இன்றைய ஆட்டத்தில் மட்டும் அவர் இரட்டை சதம் அடித்திருந்தால் நிச்சயம் அவருக்கு சோர்வு இருந்திருக்காது. முழுமையாக பில்டிங்கையும் செய்திருப்பார். உங்களுக்கு 30 வயது தான் ஆகிறது என்றால் நீங்கள் அப்போது தொடர்ந்து பேட்டிங் செய்ததால் என்னால் உடல் அளவில் மீள முடியவில்லை என்று கூறிவிட்டு ஓய்வு எடுத்திருக்கலாம்.

ஆனால் 100 ரன்களுக்கு அவ்வாறு செய்யக்கூடாது. எனவே 100 ரன்களை தாண்டி விட்டாலும் அதிகமாக ரன் சேர்க்க பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் பார்மில் இருக்கும் போது உங்களால் எவ்வளவு ரன்களை அடிக்க முடியுமோ அவ்வளவு அடியுங்கள். உங்களுடைய விக்கெட்டை தூக்கிப்போட்டு விட்டு போய்விடாதீர்கள். கில் ஆட்டம் இழக்கும்போது இன்னும் 18 ஓவர்கள் ஆட்டத்தில் எஞ்சி இருந்தது.
அவர் மட்டும் கூடுதலாக ஒரு பத்து ஓவர் விளையாடியிருந்தால் நிச்சயமாக தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து இருப்பார். ரோகித் சர்மா இதுபோல் விளையாடி தான் மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். இன்று கில்லுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இதே ஆடுகளத்தில் 200 ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது சேவாக் என்ற ஒரு வீரர் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். ஏனென்றால் ஆடுகளம் அந்த அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என சேவாக் தன்னைத் தானே குறிப்பிட்டு கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்.