மிடில் ஆர்டரில் ஆடிக் கொண்டிருந்த சேவாக்கை தொடக்க வீரராக மாற்றியது கங்குலி இல்லை.. இந்த பவுலர்!
மும்பை: இந்திய அணியில் சேரும் முன்பு வரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த வீரேந்திர சேவாக்கை அதிரடி தொடக்க ஆட்டக்காரராக மாற்றியதே முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அல்லது பயிற்சியாளர் ஜான் ரைட்டின் யோசனை என பலரும் நினைத்த நிலையில், இதன் பின்னணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இருந்த சுவாரஸ்யமான தகவலை சேவாக் வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் இதுதான் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தருடனான நேர்காணலில் பேசிய சேவாக், தான் தொடக்க ஆட்டக்காரராக மாறிய பின்னணியைப் பகிர்ந்து கொண்டார். ஆரம்ப காலத்தில் 7வது வரிசையில் பேட்டிங் செய்து வந்த சேவாக்கை தொடக்க வீரராக களமிறக்கலாம் என கேப்டன் கங்குலியிடம் ஜாகீர் கான் தான் முதன்முதலில் யோசனை கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட கங்குலி, சேவாக்கிடம் தொடக்க வீரராக ஆடுமாறு கூறினார். அப்போது தொடக்க வீரராக சரியாக ரன் குவிக்கத் தவறினால் தன்னை அணியை விட்டு நீக்கக் கூடாது என சேவாக் கேட்டுள்ளார். அப்போது கங்குலி நீக்க மாட்டேன் என நம்பிக்கையையும், ஆதரவையும் அளித்தார்.

கடந்த 2001ல் சச்சின் காயம் அடைந்தபோது ஒருநாள் போட்டியிலும், 2002ல் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியிலும் சேவாக் முதன்முறையாக தொடக்க வீரராக களம் இறங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை விளாசி புதிய பாணியை உருவாக்கிய சேவாக், 104 டெஸ்ட்களில் ஆடி 23 சதங்கள், 32 அரைசதங்களுடன் 8586 ரன்கள் குவித்தார். இதில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 309 ரன்கள் மற்றும் சென்னையில் அடித்த 319 ரன்கள் என 2 முச்சதங்கள் அடங்கும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 251 போட்டிகளில் விளையாடிய சேவாக், 15 சதங்களுடன் 8273 ரன்கள் குவித்தார். இந்தூரில் நடந்த போட்டியில் 219 ரன்கள் விளாசி இரட்டை சதமும் அடித்தார். மேலும் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றதில் சேவாக்கின் அதிரடி ஆட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது. ஜாகீர் கான் கொடுத்த அந்த ஒரு யோசனை, வீரேந்தர் சேவாக் என்ற சிறந்த தொடக்க வீரரை இந்திய அணிக்கு அளித்தது.


Click it and Unblock the Notifications
