மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டரும் மூத்த வீரருமான ரவீந்திர ஜடேஜாவை வீரேந்தர் சேவாக் விமர்சித்துள்ளார். ஜடேஜாவின் பேட்டிங் குறித்துப் பேசிய வீரேந்தர் சேவாக், அவர் பயனில்லாத ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருவதாகவும், சிஎஸ்கே வீரர்கள் "ஐபிஎல் தொடர் எப்போது முடியும், எப்போது வீட்டுக்கு போகலாம்" என காத்துக் கொண்டு இருப்பதாகவும் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியில் ஒன்பது இன்னிங்ஸ்களில் 166 ரன்கள் எடுத்துள்ளார். அதன் ஸ்ட்ரைக் ரேட் 125.75 என்பதாகும். கடந்த இரண்டு சீசன்களாக 142 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வந்த ஜடேஜா இந்த ஆண்டு மிகவும் மந்தமாக விளையாடுகிறார். அதிலும் நான்காம் வரிசை, ஐந்தாம் வரிசையில்தான் பலமுறை பேட்டிங் செய்துள்ளார். அதை குறித்து வீரேந்தர் சேவாக் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியதாவது: "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் 'எப்போது வீட்டுக்கு செல்லலாம்' என காத்துக் கொண்டு இருக்கிறார்கள். 'எப்போது ஐபிஎல் தொடர் முடியும்' என்று உட்கார்ந்திருக்கிறார்கள். யாராவது ஒருவராவது பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும். ஜடேஜா பயனில்லாத ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகிறார்."
"அவர் குறைந்தபட்சம் 15 அல்லது 18வது ஓவர் வரை பேட்டிங் செய்ய வேண்டும். அப்போது மற்ற பேட்ஸ்மேன்களாவது அவரை சுற்றி அதிரடியாக ஆட முயற்சிப்பார்கள். சாம் கரன் ஏன் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் தனது பேட்டிங் ஆர்டரில் சற்று முன்னே வந்து விளையாடியிருக்கிறார். இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் அவர் நான்காம் வரிசையில் விளையாடியிருக்கிறார்."
"ஆனால் சிஎஸ்கே-வின் பேட்டிங் வரிசையின் நிலையை வைத்துப் பார்க்கும்போது அவர்தான் மூன்றாம் வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். அவருக்கு அடுத்து சிவம் துபே விளையாட வேண்டும். அதற்குப் பிறகுதான் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் பேட்டிங் செய்ய வேண்டும்" என்று சேவாக் கூறியுள்ளார்.