டெல்லிக்காக சொல்லியடித்த கில்லி.. வேறு மாநிலத்துக்காக ஆட புறப்பட்டார் சேவாக்!
டெல்லி: ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லியுடன் இருந்த நீண்டகால தொடர்பை வீரேந்திரசேவாக் முறித்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் தொடக்க வீரராக விளாசல் பேட்டிங் மூலம் முத்திரை பதித்தவர் வீரேந்திரசேவாக். சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றபோதிலும், கடந்த ரஞ்சி சீசனில் 8 போட்டிகளில் 568 ரன்களை குவித்தார். சராசரி 51.63 ஆகும்.

இந்தியாவிற்காக சாதனை
இந்திய அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒருநாள், 19 டி20 போட்டிகளில் ஆடியுள்ள 36 வயதான சேவாக், கடந்த ஐபிஎல் தொடரின்போது, 6 போட்டிகளில் மொத்தம் 131 ரன்கள் குவித்தார். சேவாக் மற்றும் சச்சின் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.

நீண்ட நட்பு
1997-98ம் ஆண்டு, டெல்லி அணிக்காக முதல்தர கிரிக்கெட் ஆட தொடங்கிய சேவாக், இதுவரை டெல்லிக்காகவே உள்நாட்டு தொடர்களில் ஆடி வருகிறார். ஆனால், இத்தனை நாள் பந்தத்துக்கு விடை கொடுத்து வேறு மாநிலத்துக்காக விளையாட சேவாக் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர்களுக்காக
டெல்லி அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்காக தனது இடத்தை விட்டுக்கொடுக்க சேவாக் முடிவு செய்துள்ளாராம். பல்வேறு மாநில அணிகளும் சேவாக்கிற்கு வெற்றிலை, பாக்கு வைக்காத குறையாக அழைப்புவிடுத்து வந்தாலும், இதுவரை சேவாக் எந்த மாநிலத்துக்கும் பச்சைக்கொடி காட்டவில்லை. ஆனால், டெல்லியிலிருந்து கிளம்புவதற்கான பச்சை சிக்னலை மட்டும் எரியவிட்டுவிட்டாராம் சேவாக்.

வாசிம் ஜாபர்
உள்ளூர், டெஸ்ட் போட்டிகளில் முத்திரை பதித்துவரும் வாசிம் ஜாபர், மும்பைக்காக ஆடி வந்த நிலையில், விதர்ப்பா அணிக்காக ஆட உள்ளாராம். வாசிம் ஜாபர் இந்திய அணியிலும் இடம்பெற்று கணிசமான ரன்களை குவித்த தொடக்க வீரராகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications