"இந்த பையனுக்கு வானமே எல்லை".. வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியை பார்த்து பாராட்டித் தள்ளிய சேவாக்
கவுகாத்தி: 2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, இந்திய முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் மனம் திறந்து பாராட்டியுள்ளார். கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது.
தொடக்க வீரராகக் களமிறங்கிய 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, பெங்களூரு அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 78 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 300 ஆக இருந்தது.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அச்சமற்ற ஆட்டத்தைக் கண்டு வியந்த வீரேந்திர சேவாக், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: "15 வயதில் இந்த அளவுக்கு உற்சாகத்தை ஒரு வீரரால் கொடுக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தில் ஒரு நுணுக்கமும், அபாரமான துணிச்சலும் உள்ளது. அவருக்கு வானமே எல்லை" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. சூர்யவன்ஷியின் அதிரடி மட்டுமின்றி, துருவ் ஜூரலும் 78 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். நடப்புத் தொடரில் 4 போட்டிகளில் 200 ரன்கள் குவித்துள்ள சூர்யவன்ஷி, தற்போது அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைத் தன்வசம் வைத்துள்ளார்.
தனது ஆட்டம் குறித்துப் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "பந்துவீச்சாளர் யார் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பந்தின் வேகத்தையும் தன்மையையும் மட்டுமே கவனித்து விளையாடினேன். பயிற்சியில் என்ன செய்கிறேனோ அதை அப்படியே மைதானத்தில் செயல்படுத்த முயற்சிக்கிறேன்" என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் கூறுகையில், "அவன் இன்னும் சிறுவன் தான். அவனது வயதுக்கே உரிய சில சேட்டைகளைச் செய்து வருகிறான். அவனுக்கு பேட்டிங் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். அவன் இதே வேகத்தில் தொடர்ந்து விளையாடினால் எங்களுக்கு மகிழ்ச்சியே" எனத் தெரிவித்தார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை ஒரு 15 வயது சிறுவன் மிரள வைத்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications