சேவாக்கை தேடி வந்த இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பு.. ஆனால் கண்டிஷன் போட்டதால் பறிபோனது!
மும்பை: கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே மோதல் உச்சகட்டத்தில் இருந்த போது தனக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வாய்ப்பு வழங்கப்பட்டதாக வீரேந்தர் சேவாக் ரகசியத்தை உடைத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய சேவாக், "விராட் கோலியோ அல்லது அப்போதைய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரியோ என்னை அணுகவில்லை என்றால் நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கவே மாட்டேன். 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது, கும்ப்ளே மற்றும் கோலிக்கு இடையே சுமுகமான உறவு இல்லை என்பதால், என்னை அமிதாப் சவுத்ரி சந்தித்து ஆலோசனை நடத்தினார். சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் கும்ப்ளேயின் ஒப்பந்தம் முடிவடைவதால், அங்கிருந்தே புதிய பயிற்சியாளராக பதவி ஏற்குமாறும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய அணியுடன் பயணிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்" என்றார்.

ஆனால், இந்த வாய்ப்பை சேவாக் ஏற்காததற்குக் காரணம் அவர் விதித்த ஒரு முக்கிய நிபந்தனைதான். "இந்திய அணியின் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றால், உதவி பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், பிசியோ மற்றும் உடற்பயிற்சியாளர் என எனது உதவியாளர்கள் அனைவரையும் நானே தேர்வு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தேன். ஆனால், இதற்கு பிசிசிஐ சம்மதிக்கவில்லை. அதனால் நான் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை" என்று சேவாக் கூறினார்.
கும்ப்ளே விலகிய பிறகு சஞ்சய் பங்கர் தற்காலிக பயிற்சியாளராகச் செயல்பட்டார். அதன் பின் ஜூலை 2017-ல் ரவி சாஸ்திரி முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி 2021 வரை தொடர்ந்தது.
ரவி சாஸ்திரி தான் விராட் கோலியின் முதன்மை பயிற்சியாளர் விருப்பமாக இருந்ததாக அப்போது பேசப்பட்ட நிலையில். வீரேந்தர் சேவாக்கை பயிற்சியாளராக நியமிக்கவே விராட் கோலி விரும்பியது தற்போது தெரிய வந்துள்ளது. ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்தது. ஒருநாள், டி20 போட்டிகளிலும் அதிக வெற்றிகளை பெற்றது.


Click it and Unblock the Notifications
