
சேவாக் பேட்டிங் டெக்னிக்
சேவாக் எப்போதும் தன் கால்களை அதிகம் நகர்த்தாமல் தான் பேட்டிங் செய்வார். குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்களை அப்படித் தான் அணுகுவார். கால்களை அசைக்காமல், நின்ற இடத்தில் இருந்தே ஃபோர், சிக்ஸ் என வெளுப்பார் வீரேந்தர் சேவாக்.

நிபுணர்கள் கருத்து
கிரிக்கெட் நிபுணர்களைப் பொறுத்தவரை கால்களை சரியாக அசைத்து பந்தை அடிப்பவர் தான் சிறந்த பேட்ஸ்மேன். கால்களை அசைக்காமல் ஆடினால் அந்த பேட்ஸ்மேன் விரைவில் ஆட்டமிழப்பார் என்பது அவர்களின் பார்வை. ஆனால், சேவாக் இதில் தலைகீழ். கால்களை அசைக்காமலேயே பெரிய பேட்ஸ்மேன் ஆக சாதித்துக் காட்டினார்.

மாற்றிக் கொள்ளவில்லை
இதற்காக சேவாக் சில சமயம் விமர்சிக்கப்பட்டாலும் அவர் எப்போதும் தன் பாணியை மாற்றிக் கொண்டதில்லை. தொடர்ந்து தன் காலத்தின் உலகின் பெரும் அதிரடி பேட்ஸ்மேன் ஆக விளங்கினார் சேவாக். இந்த நிலையில், தன் பேட்டிங் உத்தியை இராமயணத்தில் இருந்து எடுத்ததாக கூறி உள்ளார்.

இப்படி தானே இருக்கும்
சேவாக் வேடிக்கையாக கூறுகிறாரா? அல்லது உண்மையிலேயே கூறுகிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்தால், "அட ஆமாம்.. சேவாக் பேட்டிங் செய்யும் போது இப்படி தானே இருக்கும்" என நமக்கு தோன்றுகிறது.

அங்கதன் காலை அசைக்க முயற்சி
இராமாயணத்தில் வாலியின் மைந்தன் அங்கதன் பலம் வாய்ந்தவராக இருப்பார். ஒரு கட்டத்தில் அவர் இராவணனிடம் போருக்கு முன் தூதுவராக அனுப்பப்படுவார். அப்போது இராவணனின் அவையில் இருப்போர் அங்கதனின் காலை அசைக்க முயற்சி செய்வார்கள்.
அந்த புகைப்படம்
ஆனால், யாராலும் அங்கதனின் காலை அசைக்க முடியாது. அந்த நிகழ்வு தொடர்பான ஒரு ஓவியத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சேவாக். அதில் இராவணனின் அதிகாரிகள் அங்கதனின் காலை அசைக்க முடியாமல் திணறுவது சித்தரிக்கப்பட்டுள்ளது.

உத்வேகம்
இந்த புகைப்படத்தை பகிர்ந்து "என்னுடைய பேட்டிங் உத்வேகத்தை இங்கே இருந்து தான் நான் பெற்றுக் கொண்டேன்" என வீரேந்தர் சேவாக் நகைச்சுவையுடன் கூறி உள்ளார். அந்த பதிவு லைக்குகளை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications