அகமதாபாத்: முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் 2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தான் வெற்றி பெறும் என கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் சொன்ன காரணம் தான் சிறப்பு. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்க வேண்டும் என்பதற்காகவே அந்த அணிக்கு ஆதரிப்பதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஏன் இப்படி சொன்னார்? என்று பார்க்கலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பை வென்றதில்லை. எனவே, இந்த இறுதிப் போட்டியில் புதிய அணி ஒன்று ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவதாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சிலர் சாதகமாக இருப்பதாக கூறி வருகின்றனர். அதே சமயம், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சரி சமமான ஆதரவு உள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான வீரேந்தர் சேவாக் திடீரென இந்த இறுதிப் போட்டியில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். அதன் பின் அவர் அதற்கு விளக்கம் அளித்தார்:
"நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் வெற்றி பெறும் என நினைக்கிறேன். எனது முந்தைய நிலைப்பாடுகளை நீங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில், நான் எந்த அணிக்கு ஆதரவாக இருக்கிறேனோ, அந்த அணி தோல்வி அடையும். இதற்கு முன் குஜராத் டைட்டன்ஸ்க்கு ஆதரவாக இருந்தேன், மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது."
"முதல் தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக இருந்தேன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி பெற்றது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெறும் என நினைத்தேன், ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நான் ஆதரித்த அணிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கின்றன," என்றார் சேவாக்.
அப்போது பேட்டி எடுப்பவர், "சரி, இப்போது நீங்கள் எந்த அணிக்கு ஆதரவாக இருக்கிறீர்கள்?" என்று மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு, "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்," என்றார் சேவாக். மேலும், தான் இந்திய அணிக்கு ஆதரவாக இருந்தபோதெல்லாம் இந்திய அணி தோற்று இருக்கிறது என்றார் வீரேந்தர் சேவாக். இதன் மூலம் அவர் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்.
இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த இரண்டு அணிகளுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்ற ஒரு புள்ளி விவரம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 51 சதவீத ஆதரவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 49 சதவீத ஆதரவும் உள்ளது. பொதுவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குத்தான் ரசிகர்கள் அதிகம் என்ற எண்ணம் உள்ளது.
ஆனால், இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சரி சமமான ஆதரவு இருப்பது எப்படி எனில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற மற்ற அணிகளின் ரசிகர்கள் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் முக்கிய வீரர் என்ற நிலையில், அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் நிலையில், அவருக்காகவே பஞ்சாப் கிங்ஸ் அணியை பலரும் ஆதரித்து வருகின்றனர்.