இலங்கைக்கு எதிரான தொடர் சாதனை தொடருமா…
விசாகப்பட்டினம்:இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒருதினப் போட்டித் தொடர்களில் தோற்றதில்லை என்ற சாதனை தொடர்வதற்கான வாய்ப்பு ரோஹித் சர்மா தலைமையிலான அணிக்கு கிடைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. ஒருதினப் போட்டித் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், மூன்றாவது ஒருதினப் போட்டி, விசாகப்பட்டினத்தில், 17ம் தேதி நடக்கிறது.

தர்மசாலா மற்றும் மொகாலியில் நடந்த ஆட்டங்கள் எதிர் எதிர் முடிவை காட்டியுள்ளது. அதனால், மூன்றாவது போட்டியில் பலத்த போட்டி இருக்கும்.
இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை, 17 தொடர்களில் விளையாடியுள்ளன. அதில், 12ல் இந்தியா வென்றுள்ளது. இலங்கை அணி 2ல் வென்றுள்ளது.
கடைசியாக, 1997ல் இலங்கையில் நடந்த தொடரை இந்தியா இழந்தது. அதன் பிறகு இதுவரை நடந்துள்ள 10 தொடர்களில், 8ல் இந்தியா வென்றுள்ளது. இரண்டு தொடர்கள் டிராவில் முடிந்தன.
இந்தியாவில் நடந்துள்ள ஒருதினப் போட்டித் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததில்லை. கடைசியாக, 2014ல் இந்தியாவில் நடந்த தொடரில், இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. அதன்பிறகு, இந்தாண்டு துவக்கத்தில் இலங்கையில் நடந்த தொடரையும் இந்தியா 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
இந்தியாவில் நடந்த தொடரில் வென்றதில்லை என்ற சாதனையை முறியடிக்க இலங்கை அணி வேகத்துடன் உள்ளது. அதே நேரத்தில், விசாகப்பட்டினத்தில் நடக்கும் ஆட்டத்தில் வென்று, இந்திய அணி சாதனையை தக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications