விவிஎஸ் லட்சுமணுக்கு புதிய பதவி.. 2027 உலகக்கோப்பைக்கு முன் பிசிசிஐ அதிரடி மாற்றம் செய்ய முடிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் (CoE) தற்போதைய தலைவருமான விவிஎஸ் லட்சுமணுக்கு, பிசிசிஐ-யில் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் மாதத்தில் பிசிசிஐ மேற்கொள்ள உள்ள சில முக்கிய மாற்றங்களின் போது, லட்சுமணை கிரிக்கெட் இயக்குநர் ஆக நியமிக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தற்போது பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் இளம் வீரர்களின் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களைக் கண்காணித்து வரும் லட்சுமணுக்கு, கிரிக்கெட் இயக்குநர் பதவி வழங்கப்பட்டால் அவரது பொறுப்புகள் கணிசமாக அதிகரிக்கும். இந்த புதிய பதவியின் கீழ், மூத்த இந்திய அணி, தேர்வு குழு, பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு மையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பாளராக லட்சுமண் செயல்படுவார். திறமையான வீரர்களைக் கண்டறிதல், உயர்தர பயிற்சித் திட்டங்களை வடிவமைத்தல் போன்ற முக்கியப் பணிகளையும் அவர் மேற்கொள்வார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் வரும் செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தலைமைத் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் செப்டம்பருடன் முடிவடைகிறது. அவரது பதவிக்காலத்தை 2027 ஜூன் வரை நீட்டிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த பிசிசிஐ மாற்றங்களை செய்ய உள்ளது.
விவிஎஸ் லட்சுமண் ஏற்கனவே இந்திய சீனியர் அணியின் தற்காலிக பயிற்சியாளராகப் பலமுறை பணியாற்றியுள்ளார். அண்மையில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிற பயிற்சியாளர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டபோது, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தி 3-0 என்ற கணக்கில் லட்சுமண் வெற்றி பெறச் செய்தார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்பை மறுத்து, சிறப்பு மையத்தின் தலைவராகவே தொடர லட்சுமண் விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. விவிஎஸ் லட்சுமண் கிரிக்கெட் இயக்குனராக நியமிப்பது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், செப்டம்பர் மாதத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

