கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அதே சமயம், இந்த மைதானத்தில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு மாபெரும் கிரிக்கெட் போட்டியின் நினைவலைகளும் எதிரொலிக்கின்றன. அந்தப் போட்டியின் நாயகன், ஹைதராபாத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேன் - விவிஎஸ் லக்ஷ்மண். அந்தப் போட்டி முதல் ஈடன் கார்டன் மைதானம் அவருடைய கோட்டையாகவே பார்க்கப்படுகிறது.
2001 ஆம் ஆண்டில், ஸ்டீவ் வா தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் உலகை ஆண்ட ஒரு அசுரப் படையாக இருந்தது. தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்ற மமதையுடன் இந்தியாவுக்குள் "இறுதி எல்லை" என்ற முழக்கத்துடன் நுழைந்தனர். அதாவது இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் நாடுகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய அணி என்ற பெருமையை பெறலாம் என்ற திட்டத்துடன் வந்தனர். முதல் டெஸ்டில் இந்தியாவை எளிதில் வீழ்த்தி, கொல்கத்தாவுக்குள் கால் பதித்தனர்.

கொல்கத்தா போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை செய்த போதிலும், ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பதிலுக்கு ஆடிய இந்திய அணி, மெக்ராத், வார்ன், கில்லெஸ்பி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 171 ரன்களுக்குச் சுருண்டது.
274 ரன்கள் பின்தங்கிய நிலையில், சொந்த மண்ணில் 'ஃபாலோ-ஆன்' என்ற சரிவை சந்தித்தது இந்தியா. இன்னிங்ஸ் தோல்வி என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இந்திய கிரிக்கெட்டின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக அந்தப் போட்டி மாறப்போகிறது என்று அனைவரும் நம்பிய தருணம் அது.
தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த கேப்டன் சவுரவ் கங்குலி, சூதாட்டம் போன்ற ஒரு முடிவை எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் எடுத்திருந்த லக்ஷ்மணை, இரண்டாவது இன்னிங்ஸில் நம்பர் 3-ல் களமிறக்கினார். அதுவரை மிடில் ஆர்டரில் ஆடிவந்த லக்ஷ்மணுக்கு அது ஒரு பெரும் பொறுப்பாக இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 232 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது, லக்ஷ்மணுடன் ஜோடி சேர்ந்தார் 'பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட். தோல்வியின் விளிம்பில் இருந்து, ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தை அவர்கள் எழுதத் தொடங்கினர்.
போட்டியின் நான்காவது நாள்... இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று காலை முதல் மாலை வரை, விவிஎஸ் லக்ஷ்மணும், ராகுல் டிராவிட்டும் ஆஸ்திரேலியாவின் அத்தனை வியூகங்களையும் தவிடுபொடியாக்கினர். விக்கெட் இழக்காமல் அவர்கள் ரன் குவித்தார்கள்.
லக்ஷ்மண் மணிக்கட்டைப் பயன்படுத்தி அடித்தஷாட்கள், ஆஃப்-சைடில் அவர் அடித்த அந்த நேர்த்தியான கட் மற்றும் டிரைவ்கள், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைச் சோர்வின் உச்சத்துக்கே கொண்டு சென்றன. ஸ்டீவ் வாவின் அத்தனை ஃபீல்டிங் வியூகங்களையும் உடைத்தெறிந்து, பந்தை பவுண்டரி எல்லைக்கு விரட்டினார் லக்ஷ்மண். மறுமுனையில், ஒரு அசைக்க முடியாத பாறையாக நின்றார் டிராவிட்.
அந்த ஒரு நாள் முழுவதும் பேட்டிங் செய்து, 376 ரன்கள் என்ற மெகா பார்ட்னர்ஷிப்பை அவர்கள் அமைத்தனர். லக்ஷ்மண் தனது இரட்டைச் சதத்தைக் கடந்து, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோரான சுனில் கவாஸ்கரின் 236 ரன்களை முறியடித்து முன்னேறினார்.
ஐந்தாவது நாள், லக்ஷ்மண் 281 ரன்களில் ஆட்டமிழந்தபோது, ஒட்டுமொத்த ஈடன் கார்டன் மைதானமும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியது. அந்தக் கரவொலி, ஒரு வீரருக்கானது மட்டுமல்ல; அது அவரது நம்பிக்கைக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. டிராவிட் 180 ரன்கள் எடுத்தார். இந்தியா 657 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தோற்க வேண்டிய ஒரு போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு 384 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்து, வெற்றியை நோக்கித் திருப்பிய அந்தத் தருணம், இந்திய கிரிக்கெட்டின் மறுபிறப்பாக அமைந்தது. இறுதியில், ஹர்பஜன் சிங் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சுழலில் ஆஸ்திரேலியா சரணடைய, இந்தியா சரித்திர வெற்றியைப் பதிவு செய்தது.
இன்று, அதே ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி களமிறங்கும்போது, லக்ஷ்மணின் அந்த 281 ரன்களின் நினைவுகள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு பெரும் உந்து சக்தியாக இருக்கும். அதனால்தான், இது இன்றும் விவிஎஸ் லக்ஷ்மணனின் கோட்டையாக உள்ளது. கங்குலி தலைமையிலான இந்திய அணி தான் தற்போதைய இந்திய அணியின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் என பலரும் கூறுகிறார்கள். ஆனால், அதற்கும் ஒரு ஆரம்பப் புள்ளியாக இந்த வெற்றி அமைந்தது.