இந்திய மண்ணில் சாதிக்க வேண்டும்.. இதுதான் என் ஒரே கனவு.. திரும்பி பார்க்க வைத்த பாபர் அசாம்!
கராச்சி: நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் அணிக்காக வெல்ல வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வென்றுள்ளார். 28 வயதான பாபர் அசாம், இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,813 ரன்கள் குவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 679 ரன்கள் குவித்திருந்தார். அதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். அதாவது ஒரேயொரு போட்டியில் மட்டுமே 50 ரன்களுக்கு குறைவாக சேர்த்துள்ளார்.

ஆசியக் கோப்பை
இதனிடையே ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ நிர்வாகம் தயாராக இல்லை. இதனால் நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் அல்லாமல் இலங்கை அல்லது வங்கதேசத்தில் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

பாபர் அசாம் கருத்து
இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அவர், நடப்பாண்டில் இந்தியாவில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரை பாகிஸ்தான் அணிக்காக வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள பாபர் அசாம், "நான் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு எனது பிரதான இலக்காக என்னவென்றால், அது நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சதம் விளாசுவது தான்.

பாபர் அசாம் கனவு
அதேபோல் பெஷாவர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பதும், நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் எனவும் விரும்புகிறேன். எனக்கு எங்கள் அணி வெற்றி பெறுகின்ற அணியாக இருக்க வேண்டும். மாடர்ன் டே கிரிக்கெட்டில் நாம் சிலவற்றை வித்தியாசமாக முயற்சித்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் போக்கிற்கு ஏற்ற வகையில் நம்மை தகவமைக்க முடியும்.

உள்ளூர் அணிகளுக்கு வெற்றி
நான் சில புதிய ஷாட்களை முயற்சித்து வருகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடைக்கும் பட்சத்தில் போட்டிகளில் அதை அப்ளை செய்து விளையாடுவேன். அதே நேரத்தில் எனது வழக்கமான பாணியில் எனது ஆட்டத்தை தொடருவேன் என்று தெரிவித்துள்ளார். நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் உலகக்கோப்பைத் தொடர் நடக்க உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உலகக்கோப்பையை நடத்தும் அணிகளே, கோப்பையை வென்று வரும் நிலையில், பாபர் அசாம் இந்திய மண்ணில் வெற்றிபெற வேண்டும் என்று பேசி இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications