மும்பை: இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களைத் தவிர்த்துச் சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொது இடத்தில் வாஷிங்டன் சுந்தரைக் கண்ட ரசிகர்கள், ஆர்வமிகுதியில் அவரைச் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர்.
அப்போது, சற்று எரிச்சலடைந்த முகபாவனையுடன் காணப்பட்ட சுந்தர், ரசிகர்களுக்குப் போஸ் கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் இரு தரப்பாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர்.

ஒரு தரப்பினர், "இந்திய அணிக்காக இன்னும் பெரிய அளவில் எதையும் சாதிக்காதபோதே இவருக்கு இவ்வளவு தலைக்கனமா?", "ரசிகர்களால்தான் நீங்கள் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்" என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மறுபுறம், "அவர்களும் மனிதர்கள்தானே? அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. எல்லா நேரமும் கேமராவுடன் துரத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது?", "அவருக்கு அன்று மனநிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம், அதற்காக அவரை தவறாக மதிப்பிடாதீர்கள்" என்று சுந்தருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் வெறும் விளையாட்டு வீரர்களாக மட்டுமல்லாமல், திரை நட்சத்திரங்களுக்கு நிகரான அந்தஸ்துடன் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், இந்த அளவுக்கடந்த அன்பு சில நேரங்களில் வீரர்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடையூறாக அமைவதும் உண்டு. அதுதான் இங்கேயும் நடந்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் களத்திற்கு வெளியேயான சர்ச்சையில் சிக்கியுள்ள அதே வேளையில், 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரைத் தேர்வு செய்ததற்காகத் தேர்வுக்குழுவைத் தனது எக்ஸ் (X) தளத்தில் விமர்சித்துள்ளார்.
வாசிம் ஜாபர் கூறுகையில், "யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோரை அணியில் சேர்க்காமல் விட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக இருப்பதால் நிச்சயம் ஆடும் லெவனில் இருப்பார். சுழற்பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருக்கும்போது, வாஷிங்டன் சுந்தரை எங்கே பயன்படுத்தப் போகிறீர்கள்? சிறப்பாகச் செயல்பட்ட ஜிதேஷ் ஷர்மாவையும், அதிரடி வீரர் ஜெய்ஸ்வாலையும் புறக்கணித்துவிட்டு இஷான் மற்றும் சுந்தரைத் தேர்வு செய்தது ஏன் என்று புரியவில்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.