மும்பை : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய கடைசி கட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொடர் இந்தியாவில் நடைபெறும் நிலையில் சொந்த மண்ணில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு விஷயம் பாதகமாக அமையும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வசீம் அக்ரம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தற்போது சிறப்பாக இருக்கிறது. இந்திய அணியில் முகமது சமி நன்றாகவே பந்து வீசி வருகிறார். ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கனவு இருக்கும்.
அந்த வகையில் சமி பந்துவீசி வருகிறார். பும்ரா தலைசிறந்த வீரராக உள்ளார். அவர் அணிக்கு வந்தால் அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். எனினும் அவருடைய உடல் பகுதி தான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது. அதை அவர் சரி செய்தால் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். இதேபோன்று இந்திய அணியில் நல்ல சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள்.
ஜடேஜா அஸ்வின் என இருவருமே உள்ளனர். இதில் யார் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படி இந்தியாவில் திறமையான வீரர்கள் நிறைய பேர் இருந்தாலும், சொந்த மண்ணில் விளையாடும் போது இந்தியாவுக்கு ஒரு பாதகமான விஷயம் இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு இந்தியா சொந்த மண்ணில் தான் உலக கோப்பையை வென்றது.
ஆனால் எப்போதுமே உள்ளூரில் விளையாடும் போது அளவுக்கு அதிகமான நெருக்கடி ஏற்படும். அது இந்தியாவுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தினாலும் பாகிஸ்தானுக்கும் அழுத்தம் ஏற்படும். இம்முறை இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று உலகக்கோப்பை தொடரில் நான் இந்த மைதானத்தில் விளையாட மாட்டேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது.
இந்த தேதியில் இந்த ஆடுகளத்தில் விளையாடுங்கள் என்று கூறினால் நாம் அதற்கு தயாராக தான் இருக்க வேண்டும். அது அகமதாபாத்தாக இருந்தாலும் சரி சென்னையாக இருந்தாலும் சரி. நிச்சயம் ஆடுகளம் வீரர்களின் மனநிலையை பாதிக்காது. எனவே எதையும் பற்றி கவலைப்படாமல் சென்று விளையாடுங்கள் என வசீம் அக்ரம் அறிவுரை வழங்கி இருக்கிறார்.