
இஷானுக்கு வாய்ப்பு
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் ,ஷிகர் தவான், சுப்மான் கில், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தவான் கேப்டன் என்பதால் அவருக்கு ஜோடி தற்போது யார் என்று தான் கேள்வி எழுந்துள்ளது. ரோகித் சர்மா இல்லாத போது இஷான் கிஷனுக்கு தான் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது.

வசீம் ஜாபர் கோரிக்கை
மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள இஷான் கிஷன் ஒரு அரை சதம் உள்ளிட்ட 88 ரன்கள் மொத்தமாக அடித்துள்ளார். சுப்மான் கில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் 49 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வசீம் ஜாபர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தவானுக்கு ஜோடியாக ருத்துராஜ் கெய்க்வாட்க்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

602 ரன்கள்
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ருத்துராஜ் ஐந்து இன்னிங்ஸில் நான்கு சதங்கள் விளாசி இருப்பதாக குறிப்பிட்ட ஜாபர், ருத்துராஜ் மொத்தமாக 602 ரன்களை விளாசியதாக தெரிவித்தார்.மேலும் ஷிகர் தவான் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு ஜோடியாக வலது கை பேட்ஸ்மேன் ஆன ருத்துராஜ் கெய்க்வாட் தான் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காரணம் என்ன?
தொடக்க ஜோடி இடதுகை மற்றும் வலது கை பேட்ஸ்மேனாக அமைந்தால் அது எதிரணி கேப்டனுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் கடும் நெருக்கடியை தரும். பில்டிங் ஆட்கள் நிறுத்துவது, பந்தின் லைனை சரியாக வீசுவது ஆகியவற்றில் குழப்பம் ஏற்படும். இதனால் தவானுக்கு ஜோடியாக ருத்துராஜ் வாய்ப்பு தருவது சரியானதாக அமையும்.


Click it and Unblock the Notifications