சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே, லக்னோ அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்தது. எப்போதும் புதைக்குழி போல் அமைக்கப்படும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் இம்முறை ரன்கள் காட்டாறு போல் ஓடியது. ஒட்டுமொத்தமாக நேற்று 422 ரன்களும், 14 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.
இதன் மூலம் 1426 நாட்களுக்கு பிறகு சென்னைக்கு திரும்பிய தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசியாக விளையாடிய 22 போட்டிகளில் 19 ஆட்டங்களில் வென்று தோனி தலைமையிலான அணி , சேப்பாக்கத்தை கோட்டையாக மாற்றி உள்ளது.
இந்த நிலையில், நேற்று லக்னோ அணி விளையாடும் போது சிஎஸ்கே வீரர்கள் தொடக்கத்தில் மோசமாக பந்துவீசினர்.இதன் காரணமாக லக்னோ அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்தது. எனினும் சிஎஸ்கே வின் சுழற்பந்துவீச்சாளர்கள் தான் ஆட்டத்தை சிஎஸ்கே கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் சகட்டு மேனிக்கு WIDE பந்துகளை வீசி வந்தார்கள். மேலும் நோ பால்களை அதிகம் வீசினார்கள். இதில் தேஷ்பாண்டே மட்டும் ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் 3 நோபால்களை வீசினார்.

இதனால் கடுப்பான சிஎஸ்கே கேப்டன் தோனி, ஓவர் முடிந்த உடன் தேஷ்பாண்டேவை அழைத்து, காலை எப்படி கோட்டிற்குள் வைத்து பந்தை சரியாக வீச வேண்டும் என்று கற்று கொடுத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. போட்டி முடிந்த உடன் தோனி பேசுகையில், நோ பால்களை வீசினால் வேறு கேப்டனுக்கு கீழ் விளையாட நேரிடும் என்று எச்சரிக்கை கொடுத்தார்.