அலட்சிய பேட்டிங்-இந்தியா மோசமான தோல்வி
நாக்பூர்: இந்திய வீரர்களின் அலட்சியமான பேட்டிங் காரணமாக அபாரமாக வென்றிருக்க வேண்டிய போட்டியை படு சாதாரணமாக இழந்தது இந்தியா.
தென் ஆப்பிரிக்காவை நேற்று நாக்பூரில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்தது இந்தியா. இந்தியாவுக்கு சச்சினும், ஷேவாக்கும் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 140 ரன்கள் வரை இருவரும் ஆட்டமிழக்காமல் அடித்து நொறுக்கியதால் இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை எட்டும் நிலை உருவானது.
பிரமாதமாக ஆடிய ஷேவாக் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் சச்சின் சிறப்பாக ஆடி 111 ரன்களைக் குவித்தார். இது அவருக்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து 99வது சதமாகும்.

பின்னர் கெளதம் கம்பீரும் தன் பங்குக்கு 69 ரன்களைக் குவித்தார். ஆனால் அதற்குப் பிறகுதான் இந்தியாவை சனி வந்து பீடித்துக் கொண்டது. இவர்களுக்குப் பின்னால் வந்த வீரர்கள் எல்லாம், வந்தோம், போனோம் என்ற ரீதியில் படு கேவலமாக ஆடியதால், சடசடவென இந்திய விக்கெட்கள் வீழ்ந்தன. 350 ரன்களை இந்தியா தாண்டும் என்ற நிலையில் இருந்ததை அப்படியே தலைகீழாக மாற்றி 296 ரன்களுக்கு சுருண்டு போகச் செய்து விட்டனர் நடுக்கள மற்றும் கடை நிலை வீரர்கள்.
இந்தியா 30 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்களை இழந்தது என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது புரியும்.
மிக மிக மோசமான பேட்டிங்கை நேரில் பார்த்த இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார்.
பேட்டிங் சொதப்பினாலும் பந்து வீச்சாளர்கள் சற்று சிறப்பாகவே பந்து வீசினர். தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி தரும் வகையில் பந்து வீசினர். இதனால் தென் ஆப்பிரிக்கா ரன் எடுக்கத் தவறியது. ஆனால் பேட்டிங் பவர் பிளேயில் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடி நெருக்கடியை வெகுவாகக் குறைத்து விட்டனர்.
இதன் காரணமாக நெருக்கடி சற்று குறைந்து வெற்றி இலக்கை நோக்கி பதட்டம் இல்லாமல் நகர முடிந்தது அவர்களால். இருப்பினும் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. இதனால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்த ஓவரை ஒரு ஸ்பின்னரிடம் கொடுத்திருக்கலாம். ஆனால் நேஹ்ராவை பந்து வீச அழைத்தார் டோணி. இதை தென் ஆப்பிரிக்க வீரர் ராபின் பீட்டர்சன் சரியாக பயன்படுத்திக் கொண்டார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பீட்டர்சன், அடுத்த பந்தை சிக்சருக்குத் தூக்கி விட்டார். அடுத்த பந்தில் 2 ரன், 4வது பந்தில் பவுண்டரி விளாசி அணியை வெற்றி இலக்குக்கு இட்டுச் சென்றார் பீட்டர்சன்.
பீட்டர்சனின் இந்த அட்டகாச ஆட்டம், இந்தியாவுக்கு, இந்த உலகக் கோப்பைப் போட்டியில் முதல் தோல்வியை பெற்றுத் தந்து விட்டது.
இப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும் கூட தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலேயே உள்ளது. தனது சுற்றுப் போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான ஆட்டத்தில் மட்டுமே இன்னும் இந்தியா மோத வேண்டியுள்ளது. அந்தப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications