துபாய்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாடியது மறக்க முடியாத இனிய தருணம் என்று முன்னாள் இந்திய வீரர் ஜவஹல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் 'மைசூர் எக்ஸ்பிரஸ்' என்றழைக்கப்பட்ட ஸ்ரீநாத், 2003ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். தற்போது சர்வதேச போட்டிகளுக்கான நடுவராக இருக்கிறார்.

பாகிஸ்தானுடனான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து அவர் கூறியுள்ளதாவது:
4 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வென்றுள்ளோம். அது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
பாகிஸ்தானுடன் விளையாடும் போது நாம் நம்மை மேம்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும். இரு அணிகளும் மோதும் இருநாட்டு ரசிகர்களும் பலத்த எதிர்பார்ப்புடன் இருப்பர்.
2003ஆம் ஆண்டு போட்டியில் டெண்டுல்கரை பாகிஸ்தானின் சோயிப் அக்தர் வீழ்த்தியது போல பல பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வெற்றியோ தோல்வியோ இருநாடுகளிடையேயான போட்டி என்பது இரு அணியினருக்கும் நீண்டநாள் மனதில் நிற்கக் கூடியதாக இருக்கும்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிப்ரவரி 15-ந் தேதியன்று அடிலெய்டில் இந்தியா- பாகிஸ்தான் மோதுகிறது. கடந்த காலங்களில் இது வேறுபட்டதாக இருக்காது. இரு அணிகளும் சம பலமானவையே. அணியின் வீரர்கள் கூட்டாக இணைந்து விளையாடி வெற்றியை இலக்காக கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீநாத் கூறினார்.