லண்டன்: 2025 வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 41 வயதான தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் கடைசி பந்தில் ரன் அவுட் செய்து தென்னாப்பிரிக்கா அணியின் 1 ரன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த மார்னே வான் வைக் மற்றும் ஜேஜே ஸ்மட்ஸ், ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

குறிப்பாக, மார்னே வான் வைக் வெறும் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். ஜேஜே ஸ்மட்ஸ் அவருக்குப் பக்கபலமாக 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால், தென்னாப்பிரிக்கா வலுவான நிலையை எட்டியது.
வான் வைக் மற்றும் ஸ்மட்ஸ் ஜோடி பிரிந்த பிறகு, தென்னாப்பிரிக்காவின் ரன் வேகம் சற்று குறைந்தது. கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பீட்டர் சிடில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால், 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு, கிறிஸ் லின் மற்றும் ஷான் மார்ஷ் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பலர் நல்ல தொடக்கம் பெற்றாலும், அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினர். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை வீசிய வேய்ன் பார்னெல், முதல் பந்திலேயே சிக்ஸ் விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அதுவரை அதிரடியாக ஆடி வந்த டேனியல் கிறிஸ்டியன் கடைசி பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்தார். ஆனால், அவரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 ரன் ஓடி வெற்றி பெற திட்டமிட்ட நிலையில் அவர்கள் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் - பார்னெல் இணைந்து ரன் அவுட் செய்தனர். ஆஸ்திரேலியாவை 185 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 1 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த அரை இறுதிப் போட்டி இந்திய வீரர்களின் விலகலால் ரத்து செய்யப்பட்டது. அதனால் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பாகிஸ்தான் அணி கணிக்க முடியாத ஆட்டத்திற்குப் பெயர் பெற்றது. அதே சமயம், தென்னாப்பிரிக்கா அணி முக்கியப் போட்டிகளில் சொதப்பும் "சோக்கர்ஸ்" என்ற பெயரை இந்த முறை மாற்றி, இந்த லெஜண்ட்ஸ் தொடரில் கோப்பையை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.