பொங்கலுக்காக இந்திய அணியை வெள்ளையடிக்கப்போகிறதாம் ஆஸி.: மேக்ஸ்வெல் கொக்கரிப்பு
சிட்னி: ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வெல்வதோடு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் முழுமையாக வென்று இந்தியாவை வொய்ட் வாஷ் அடிப்போம் என்று கொக்கரித்துள்ளார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கிளன் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது.
இதுவரை 3 ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், மூன்றிலும், 2வதாக பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் பெரிய ஸ்கோர்களை எளிதாக விரட்டி சென்று வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

ஆட்ட நாயகன்
நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றவர் கிளன் மேக்ஸ்வெல். 96 ரன்கள் குவித்து நாட்-அவுட்டாக நின்று, இந்தியா நிர்ணயித்த 296 ரன்கள் இலக்கை விரட்டி பிடிக்க உதவியவர்.

பதற்றப்படவில்லை
மேக்ஸ்வெல் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது: நான் களமிறங்கியபோது, ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும், பதற்றமின்றிதான் பேட்டிங் செய்ய தொடங்கினேன்.

அடிக்க ஆரம்பித்தேன்
எனது மறுமுனையில் நின்ற ஜேம்ஸ் பால்க்னர் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் சிங்கிள்களை விரட்டிக்கொண்டிருந்ததால், நான் அடித்து ஆட முடிவு செய்தேன். நான் நினைத்ததை போலவே அடித்தும் ஆட முடிந்தது.

இத்தொடரே முக்கியம்
உலக கோப்பை டி20 போட்டியை மனதில் வைத்தோ, வேறு போட்டிகளை மனதில் வைத்தோ நான் ஆடுவதில்லை. தற்போது எந்த தொடரில் ஆடுகிறோமோ அதற்கு ஏற்ப ஆட்டத்தை ஆடுவதுதான் எனது வழக்கம்.

நம்பர்-1 நாங்கதான்
இந்தியா நிர்ணயித்த பெரிய ஸ்கோர்களையெல்லாம் எளிதில் விரட்டி பிடித்து வெற்றி பெற்றுள்ளோம். தற்போதைய நிலையில் உலகின் வேறு எந்த அணியைவிடவும் சிறப்பாக ஆடுவது ஆஸ்திரேலியாதான். தரவரிசையில் நாங்கள் முதலிடத்தில் உள்ளதை நியாயப்படுத்தும் வகையில்தான் ஆட்டங்கள் அமைந்துள்ளன.

வொய்ட் வாஷ்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வெல்வோம் என்ற நம்பிக்கையுள்ளது. இதன்பிறகு, டி20 தொடரையும், 3-0 என்ற கணக்கில் வென்று, வொய்ட்வாஷ் அடிப்பதுதான் ஆஸ்திரேலியாவின் நோக்கம். இவ்வாறு மேக்ஸ்வெல் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications