"பிட்ச்"சையெல்லாம் எப்படிங்க நாம "கண்ட்ரோல்" பண்ண முடியும்.. டோணி கேட்கிறார்!
நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார் கேப்டன் டோணி. அதேசமயம், பிட்ச் சரியில்லாமல் போனதால்தான் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்ததா என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிட்ச்சைக் குறை கூற முடியாது. அதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. நமக்கு முன் உள்ள பிட்ச்சின் தன்மைக்கேற்பத்தான் ஆட முடியும் என்று டோணி விளக்கியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டில் இரு அணிகளுமே நிறயை ரன்கள் எடுத்தன. வழக்கமான இங்கிலாந்து பிட்ச் போலவே நாட்டிங்காம் பிட்ச் இல்லை. பந்துகள் எகிறவில்லை. மாறாக ரன்களைக் குவிக்கும் வகையிலேயே பந்துகள் பேட்டுகள் மீது பட்டுத் தெறித்தன. இதனால்தான் இந்தியாவின் கடைக்கோடி வீரர் வரைக்கும் ரன்களைக் குவித்து அசத்தி விட்டனர்.
இப்போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 457 ரன்களையும், 2வது இன்னிங்ஸில் 391 ரன்களையும் எடுத்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 496 ரன்களை எடுத்தது. 2வது இன்னிங்ஸை ஆட முடியவில்லை.

பிட்ச் என்ன பாவம் செய்தது...
போட்டி முடிவு குறித்து டோணி கூறுகையில் பிட்ச்சை நாம் கட்டுப்படுத்த முடியாது. அதில் என்ன உள்ளதோ அதை எதிர்கொண்டுதான் நாம் ஆட வேண்டும். ஆனால் அதைத் தவிர்த்து இந்தப் போட்டியில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன.

பந்து வீச்சு சூப்பரப்பு
நமது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதுபோன்ற விக்கெட்டில் விக்கெட்களை எளிதில் வீழ்த்துவது கடினம். ஆனால் நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

நல்ல முயற்சி.. நல்ல முயற்சி
நமது பந்து வீச்சாளர்கள் நிறைய பந்து வீசியபோதிலும் கட்டுப்பாட்டோடு வீசியது பாராட்டுக்குரியது. நல்ல முயற்சியை அவர்கள் மேற்கொண்டனர். ஒவ்வொருவரும் தலா 25 முதல் 30, 35 ஓவர்கள் வரை பந்து வீசினர்.

பேட்டிங்கும் பரவாயில்லை பாஸ்...
அதேபோல பேட்டிங்கும் கூட ஒட்டுமொத்தமாக திருப்தியாகவே இருந்தது. முரளி விஜய் உண்மையிலேயே சிறப்பாக ஆடினார். மற்றவர்களும் சிறப்பாக ஆடினர்.

சிலருக்கு சரிப்பட்டு வரவில்லை
சில வீரர்கள் நன்றாக ஆரம்பித்தனர். ஆனால் தொடர முடியவில்லை (கோஹ்லியைச் சொல்கிறார் போல). சிலருக்கு இன்னும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

முந்தைய டூர்களுடன் ஒப்பிட்டால் இது ஓ.கேதான்
முந்தைய சுற்றுப்பயணங்களுடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவோ பரவாயில்லை. நல்ல போட்டி என்ற திருப்தி வந்துள்ளது.

2 "ஆஃப்" அடித்த புவனேஸ் குமார்
பிட்ச் சரியில்லாமல் பந்து வீச்சு எடுபடாத காரணத்தால் இந்திய வேகப் பந்து வீச்சாளர் புவனேஸ் குமார், ஸ்டூவர்ட் பின்னி, அட முகம்மது ஷமி ஆகியோர் கூட நிறைய ரன்களைக் குவித்தனர் இப்போட்டியில். அதிலும் புவனேஸ் குமார் இரண்டு அரை சதம் வேறு போட்டு கலக்கினார். இங்கிலாந்துத் தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் நிறைய ரன்களைக் குவித்தார்.

உலக சாதனை படைத்த ஆண்டர்சன்
அதிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட்டுடன் இணைந்து 198 ரன்களைக் குவித்து புதிய உலக சாதனையும் படைத்தார். ரூட் 154 ரன்களைக் குவித்தது தனிக் கதை.

முரளி விஜய் சூப்பர்ப் பார்ம்
இந்தியத் தரப்பில் முரளி விஜய் நல்ல பார்மை வெளிக்காட்டினார். முதல் இன்னிங்ஸில் 146 ரன்களைக் குவித்த அவர் 2வது இன்னிங்ஸில் அரை சதம் போட்டார்.
இத விடுங்க, தல.. அடுத்து உள்ள 4 போட்டிகளிலும் இதே மாதிரி விளையாட முயற்சி பண்ணுங்க.. நம்மாளுகள நம்ப முடியாது.. சரியா விளையாடாட்டி திட்டித் தீர்த்துடுவாங்க!


Click it and Unblock the Notifications