பண்ணிட்டோம்... நிறைய தப்பு பண்ணிட்டோம்... என்ன பண்றதுன்னே தெரியலையே... புலம்பிய அந்த கேப்டன்
ஜெய்பூர்: நிறைய தவறுகள் செய்தோம். தொடர்ந்து 4 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நாங்கள் அடுத்த ஓரிரு போட்டிகளுக்குள் வெற்றி பாதைக்கு திரும்பிவிடுவோம் என்று பெங்களூர் கேப்டன் கோலி புலம்பி தள்ளியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பெங்களூரு அணியை முதலில் பேட் செய்யும்படி பணித்தது.
தொடக்கத்தில் நிதானமாக ஆடி... இடையில் சில விக்கெட்டுகளை இழந்து, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 158 ரன்களை எடுத்தது. 159 ரன்களை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் 20வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, இந்த தொடரின் முதல் வெற்றியை பெற்றது.

புள்ளிகள் பட்டியல்
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய ஸ்ரேயாஸ் கோபால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

20 ரன்கள் குறைவு
இந்நிலையில் ராஜஸ்தான் அணியுடனான இந்த தோல்வி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறியதாவது: நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க கைகொடுத்தனர்.

நிறைய தவறுகள்
ஆனால் இன்னும் 15 ரன்கள் கூடுதல் எடுத்திருந்தால் போட்டி நிச்சயம் சவாலாக இருந்திருக்கும். களத்தில் நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம். தொடர்ந்து 4 போட்டிகளிலும் தோல்வி.

வெற்றி பெறுவோம்
அடுத்த ஓரிரு போட்டிகளுக்குள் வெற்றி பாதைக்கு திரும்பிவிடுவோம் என்று நம்புகிறேன். இன்னும் 10 போட்டிகள் எங்களுக்கு உள்ளன. நிச்சயமாக அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications