புனே : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய அடுத்த ஆட்டமாக வங்கதேசத்தை நாளை புனே கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் பிளேயிங் லெவன்
மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படி ஒரு யோசனையே இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பராஸ் மாம்பரே கூறியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தத் தொடரில் நாங்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்திருக்கிறோம்.

தற்போது இந்த தொடக்கத்தை அப்படியே பின் தொடர வேண்டும் என எண்ணுகிறோம். தற்போது வரை எங்கள் அணியில் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற விவாதம் எழவில்லை. முகமது சமி,அஸ்மின் போன்ற வீரர்கள் எல்லாம் பெஞ்சில் அமர வைக்கப்படுவது என்பது எளிதான காரியம் கிடையாது. ஆனால் அணியில் தேவை என்ன என்பது குறித்து அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இது நிச்சயம் கடினமான முடிவு தான். ஆனால் அஸ்வின் போன்ற வீரர்கள் எல்லாம் அணிக்காகவே இருப்பார்கள். அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள். அணியின் தேவை என்ன என்பதையும் உணர்ந்து அஸ்வின் நடந்து கொள்வார். அணியில் இடம் கிடைக்கவில்லையே என்று ஒரு முறை கூட அவர் கோபமாக நடந்து கொண்டது கிடையாது.
நான் பல ஆண்டுகளாக அஸ்வினை பார்த்து வருகிறேன். அவர் ஒரு முறை கூட என்னை சேர்க்கவில்லையே என்று புகார் அளித்ததே கிடையாது. இதேபோன்று சூரிய குமாரும் ஒரு சாம்பியன் வீரராக திகழ்கிறார். அவர் ஒரு மேட்ச் வின்னர். தன்னுடைய அதிரடி ஆட்டத்தை பலமுறை அவர் காட்டியிருக்கிறார். சூரியகுமார் யாதவுக்கு பந்து வீசுவது என்பது கடினமான காரியம்.அவர் ஒரு 360 டிகிரி வீரர்.
எனினும் அஸ்வின்,சமி, சூர்யகுமார் போன்ற திறமை வாய்ந்த வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு இருந்தால் நிச்சயம் அவர்கள் இடம் பெறுவார்கள். ஆனால் எந்த வீரர்களை நீக்கிவிட்டு இவர்களை அணியில் சேர்ப்பது என்பது தான் பிரச்சனையே. தற்போது வரை இந்த மூன்று வீரர்களுக்கும் அணியின் இடமில்லை. ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக விளையாடுவார்கள் என்று பராஸ் மாம்ப்ரே கூறினார்.