IND vs SL: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி.. இந்தியா vs இலங்கை மோதல்.. கொழும்பு வானிலை எப்படி இருக்கு?
கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடும் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், கொழும்பு வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஆசியக் கோப்பை தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்கவுள்ளது. சொந்த மண்ணில் களமிறங்குவதால் இலங்கை அணியை அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட முடியாது. அதுமட்டுமல்லாமல் நடப்பு சாம்பியன் என்ற பட்டமும், ரசிகர்களின் ஆதரவும் இலங்கை அணிக்கு அதிகமாக இருக்கும். இதனால் இந்திய அணியால் அவ்வளவு எளிதாக ஆசியக் கோப்பையை கைப்பற்ற முடியாது.

இலங்கை அணி மிகப்பெரிய சவாலை அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆட்டம் நடக்குமா என்ற கவலையும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏனென்றால் இதுவரை இலங்கையில் நடைபெற்ற அத்தனை போட்டிகளிலும் மழை குறுக்கீடு இருந்துள்ளது. அதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டதுடன், இன்னொரு போட்டி ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டது.
அதேபோல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 42 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே நடைபெற்றது. இதனால் இறுதிப்போட்டி நாளான இன்றும் மழை வருமா என்ற ரசிகர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு வானிலையை பொறுத்தவரை ஆட்டத்தின் போது 90 சதவிகிதம் வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் ஆட்டம் தொடங்கும் நேரம் மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் பட்சத்தில் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக கூட ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி நடத்த முயற்சிகள் எடுக்கப்படும். ஒருவேளை 20 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக கூட நடத்த முடியவில்லை என்றால், ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு ஒத்தி வைக்கப்படும். ஒருவேளை ரிசர்வ் டேவிலும் மழை காரணமாக ஆட்டத்தை நடத்த முடியவில்லை என்றால், கோப்பையை இரு அணிகளுக்கும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications