போர்ட் ஆப் ஸ்பெயின் : உலகக்கோப்பைக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய ஆடுகளம் மட்டும் சரியாக இருந்து மழை பெய்யாமல் இருந்தால் இந்தியாவை தோற்கடித்திருப்போம் என்ற பாணியில் அந்த அணி கேப்டன் பிராத்வெயிட் கூறியிருப்பது இந்திய ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இரண்டாவது டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருந்தது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 289 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இன்னிங்சில் ஆடுகளத்தில் படுத்து தூங்கிவிட்டு தற்போது வீரவசனம் பேசி இருக்கிறார். போட்டி மழையால் கைவிடப்பட்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய பிராத்வெயிட், இந்த டெஸ்டில் நாங்கள் பேட்டிங்கில் எங்களுடைய போராட்ட குணத்தை வெளிப்படுத்தினோம்.
நாங்கள் இந்தியாவுக்கு எதிராக பேட்டிங்கில் நன்றாகவே சண்டையிட்டோம். பந்துவீச்சில் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் பேட்ஸ்மேன்கள் முதல் டெஸ்டில் விளையாடிய விதத்தில் இருந்து இரண்டாவது டெஸ்டில் நல்ல கம்பேக் கொடுத்தார்கள். எனினும் முதல் இன்னிங்சில் நாங்கள் இருபது ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாட விரும்புகிறோம்.
கடைசி நாளில் 289 ரன்களை நாங்கள் வெற்றிகரமாக துரத்தி விடுவோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தோம். ஏனென்றால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு மழை காரணமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு அமையவில்லை. எத்தேனஸ் முதல் டெஸ்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுதியானவர் என்பதை முதல் டெஸ்ட் போட்டியிலே காண்பித்து விட்டார்.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எல்லாம் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருக்கும். ஆனால் இங்கு நாங்கள் தொடர்ந்து எங்களுடைய பேட்டிங்கை முன்னேற்ற பயிற்சி செய்வோம். இந்த டெஸ்டில் எங்கள் அணியில் இரண்டு பேட்ஸ்மேன்கள் நன்றாகவே விளையாடினார்கள். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அந்தப் போட்டிக்கு நாங்கள் சிறந்த வகையில் தயாராகுவோம் என்றும் கூறியுள்ளார்.