Andre Russell : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரூ ரஸல் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அவர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று ஏற்கனவே வெற்றி பெற்றது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி பெர்த் நகரில் களம் கண்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதை அடுத்து வழக்கம்போல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரராக களம் இறங்கிய ஜான்சன் சார்லஸ் நான்கு ரன்களிலும் , கேயில் மெயர்ஸ் 11 ரன்களிலும் நிக்கோலஸ் பூரான் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ராஸ்டன் சேஸ் 37 ரன்களும், கேப்டன் ரோமன் போவெல் 21 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை எடுத்து ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ருத்தர் போர்ட் மற்றும் ஆண்ட்ரூ ரஸல் ஆஸ்திரேலியாவில் பந்துவீச்சை சிதற அடித்தனர். இருவரும் பௌண்டரி, சிக்சர் என பறக்க விட்டனர். குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பிய ரஸல் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதற அடித்தார்.
குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா வீசிய பந்தில் நான்கு சிக்ஸர் ஒரு பவுண்டரி என 28 ரன்கள் அடித்தார். மொத்தமாக அவர் மட்டும் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இதில் 7 இமாலய சிக்சர்களும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இதேபோன்று ருத்தர்போர்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பௌண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.
இதன் மூலம் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 221 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி போராடினார். அவர் 49 பந்துகளை எதிர் கொண்டு 81 ரன்கள் சேர்த்தார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் டிம் டேவிட் 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்சர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.
எனினும் ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியில் ஆடம் சாம்பா நான்கு ஓவர்கள் வீசி 65 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் ஒரு போட்டியில் விட்டுக்கொடுத்த வீரர் என்ற பெருமையை சாம்பா பெற்றார். இதேபோன்று ஆறாவது விக்கெட்டுக்கு t20 போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை ஆண்ட்ரூ ரஸல் ஜோடி பெற்றது.