பிசிசிஐ ரகசியங்கள் கசிவு.. சேத்தன் சர்மாவின் எதிர்காலம் என்ன? ஆக்ஷனில் குதிக்கும் ஜெய் ஷா- விவரம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நடக்கும் பல்வேறு சர்ச்சைகளை வெளிப்படையாக கூறியுள்ள தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவின் நிலைமை, அடுத்து என்னவாக இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக இருந்து வருகிறார் சேத்தன் சர்மா. டி20 உலகக்கோப்பை தோல்விக்காக சமீபத்தில் தேர்வுக்குழு நீக்கப்பட்ட போது இவர் மட்டும் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இப்படி ஏற்கனவே சந்தேகத்தின் வலையில் சிக்கியுள்ள சேத்தன் சர்மாவுக்காக ஸ்டிங் ஆப்ரேஷன் ஒன்றை நடத்தியுள்ளது தனியார் தொலைக்காட்சி. அதில் பல்வேறு உண்மைகளை அவர் உளறியிருக்கிறார்.

சேத்தன் சர்மா பேச்சு
பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலிக்கு எப்போதுமே விராட் கோலியை பிடிக்காது. இதனால் தான் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக கோலியின் மோசமான ஃபார்மை பயன்படுத்திக் கொண்டோம் என வெளிப்படையாக கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா - விராட் கோலி இடையே எந்தவித பிரச்சினையும் கிடையாது, நல்ல நண்பர்கள் தான் எனவும் கூறியுள்ளார்.

ஊக்கமருந்து சர்ச்சை
இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்று இந்திய வீரர்கள் ஊக்கமருந்து எடுத்துக்கொள்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பெரிய தொடர்களில் விளையாடுவதற்காக முன்னணி வீரர்கள் பலரும் ஊக்கமருந்து எடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் 80% வரை தான் ஃபிட்னஸுடன் இருக்கிறார்கள் என்று தெரிந்து அதனை எடுத்துக்கொண்டு தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். இந்த ஊக்கமருந்து எந்தவித சோதனையிலும் சிக்காது எனவும் கூறி சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார்.

அடுத்து என்ன நடவடிக்கை
இந்நிலையில் இப்படி இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் பல உண்மைகளை வெளிப்படையாக உளறியுள்ள சேத்தன் சர்மாவின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வி பலரது மனதிலும் ஓடி வருகிறது. அதற்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், தேர்வுக்குழுவில் பணியாற்றுபவர்கள் வெறும் ஒப்பந்த அடிப்படையில் தான் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் பிசிசிஐ தகவல்களை மீடியாக்களில் கூற அனுமதி கிடையாது.

அதிகாரத்தில் ஜெய் ஷா
பிசிசிஐ விதிமுறைகளை மீறி சேத்தன் சர்மா பேட்டி கொடுத்திருக்கிறார். அவர் மீதான விசாரணை உடனடியாக தொடங்கப்பட்டுவிட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு சேத்தன் சர்மா மீதான நடவடிக்கையை கூறுவார் பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications