மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது முன்னாள் வீரர்கள் முன்வைத்துள்ள விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் பற்றி பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் புகழும், மார்க்கெட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாயம், கிரிக்கெட் அகாடமி, சினிமா தயாரிப்பு, ஏற்றுமதி, விளையாட்டு என்று ஏராளமான முதலீடுகளை தோனி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தோனி தன்னுடன் விளையாடிய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர காரணம் என்று ஏராளமான வீரர்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். குறிப்பாக 2007 முதல் 2011 வரை தோனியுடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் இப்படி கூறிய விவகாரம் குறித்து பார்க்கலாம்.
அதில் முதல் வீரராக 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய கம்பீர், தோனியை ஏராளமான முறை கடுமையாக சாடியுள்ளார். சமூக வலைதளங்களில் தோனியை புகழ்ந்து பேசினால், சர்ச்சையை புகைப்படத்தையோ, ட்வீட்டையோ பகிர்வார். அதுமட்டுமல்லாமல் கவுதம் கம்பீர் டெஸ்ட் போட்டிகளில் சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக தோனி புகார் கடிதம் அளித்ததே இந்த மோதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அதேபோல் 2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சச்சின், கம்பீர் மற்றும் சேவாக் ஆகியோரின் ஃபீல்டிங் ஸ்லோவாக இருப்பதால், சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்குவோம் என்று தோனி வெளிப்படையாகவே கூறினார். அதற்கு அடுத்த போட்டியிலேயே ஸ்லிப் திசையில் அபார கேட்சை பிடித்து சேவாக், எனது ஃபீல்டிங்கை பார்த்தீர்களா என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டு பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து தோனியின் தளபதியாக இருந்த யுவராஜ் சிங், 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு அடுத்த கேப்டனாக பிசிசிஐ என்னை தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் தோனியை தேர்வு செய்தது ஆச்சரியமாக உள்ளது என்று வெளிப்படையாக கூறினார். யுவராஜ் சிங்கின் தந்தை ஒருபடி மேல் சென்று, யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர தோனியே காரணம் என்று விமர்சித்தார்.
அதேபோல் இர்பான் பதானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவும் தோனியே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது கூட, பதானை தோனி பயன்படுத்த முன்வரவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.