வெலிங்டன்: வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் மார்லன் சாமுவேல்சை பவுண்டரி எல்லையில் வைத்து நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி அவுட் செய்த விதம் வைரலாகியுள்ளது.
மார்லன் சாமுவேல்ஸ் 15 பந்துகளில் 27 ரன்களை குவித்து அதிரடியாக சென்று கொண்டிருந்தார். பவுண்டரிகளும், சிக்சர்களும் அவரது பேட்டில் பட்டு எகிறின.
இந்நிலையில்தான், 10வது ஓவர் போடவந்த டிரென்ட் பவுல்ட் பந்தை சிக்சருக்கு தூக்கியடித்தார், சாமுவேல்ஸ். அந்த பந்து சிக்சருக்கு சென்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில், அந்த சூப்பர் கேட்ச் பதிவானது.
ஆம்.. தேர்ட் மேன் பகுதியில் பவுண்டரி எல்லைக் கோட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த மூத்த வீரர் டேனியல் வெட்டோரி, பந்து தன்னை தாண்டி போகும் போது எகிறி அதை இடது கையால் கேட்சாக மாற்றினார். இதற்காக சில வினாடிகள் அவர் காற்றில் பறந்தபடி நிற்க வேண்டியதாயிற்று. இதை பார்த்த நியூசிலாந்து ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர்.
இத்தனைக்கும் வெட்டோரி 18 அல்லது 20 வயது வீரர் கிடையாது. 36 வயதான மூத்த வீரர் என்பது சிறப்பு.