கீப்பர் முதல் மேய்ப்பர் வரை... மகேந்திர சிங் டோணி என்னும் ஒரு சாதனை நாயகன்!
டெல்லி: எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரை கேட்டதும், உலகின் பிற அணி வீரர்களுக்கு, வயிற்றில் கலக்கமும், கைகளில் நடுக்கமும், கண்களில் பதற்றமும் தோன்றுமோ அந்த கிரிக்கெட் வீரர் பெயர்தான் மகேந்திர சிங் டோணி.
இவரது ஹெலிகாப்டர் ஷாட்டை பார்த்தோ, நெருக்கடியான நேரத்தில் அவர் அடித்தும், படுத்தும், அணியை வெற்றிபெற வைப்பதை பார்த்தோ கூட எதிரணிகள், நடுங்கியது கிடையாது. ஆனால், வாழ்நாள் லட்சியமே, இந்த வேலைதான் என்பதைப் போல அவர் செய்யும் கேப்டன்ஷிப்புக்காகத்தான் இத்தனை பயமும்.
பெரிய அணியோ, சிறிய அணியோ, அனைத்து அணிகளையும் ஒரே தராசில் வைத்து, வியூகங்களை வகுத்து அவர் செயல்படுத்தும் திறமை கண்டு வாய் பிளந்து நின்கின்றனர் பிற அணி கேப்டன்கள். அப்படி டோணியிடம் என்னதான் இருக்கிறது என்பவர்களுக்கு, இதோ அவரது ரெக்கார்டுகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை:

மூன்றிலும் சாம்பியன்
டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, உலக கோப்பை ஆகிய மூன்றையும் வென்ற ஒரே கேப்டன் டோணி.

உலக கோப்பையில் ஓர் சாதனை
உலக கோப்பையில் தொடர்ச்சியாக 9 வெற்றிகள் பெற்ற அணியின் கேப்டன். உலக அளவில் இது 2வது பெரும் சாதனை. இந்திய அளவில் முதல் முறை.

நாட்டின் சிறந்த உலக கோப்பை கேப்டன்
உலக கோப்பையில் அதிக போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி பெற்றுத் தந்த கேப்டன். மொத்தம் (இதுவரை) 12 போட்டிகள்.

ஆஸி.யிலும் அசத்தல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரை இந்தியா வென்றதில்லை என்ற குறையை போக்கியவர். 2008ல் நடந்த காமன்வெல்த் பேங்க் சீரிசில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

எந்த நாடா இருந்தாலும் வெட்டுவோம்..
வெளிநாடுகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர். மொத்தம், 59 போட்டிகள். முந்தைய பெஸ்ட் 58 வெற்றிகள். இது கங்குலி தலைமையில் கிடைத்தது.

சூப்பர், கீப்பர்
இந்தியாவின் தலை சிறந்த விக்கெட் கீப்பர். ஒருநாள் போட்டிகளில் மொத்தம், 323 அவுட்டுகளில் பங்களிப்பை கொடுத்துள்ளார். இதில் 238 கேட்சுகளாகும், 85 ஸ்டம்பிங்குகள் ஆகும்.

அசாருதீனையும் விடவில்லை
இந்திய அணிக்காக 175 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அசாருதீன் 174 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

ராசிக்கார பையன்
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன். 98 ஒருநாள் போட்டிகளில் டோணி அணி வென்றுள்ளது.

கீப்பரும் நானே, மேய்ப்பரும் நானே..
விக்கெட்கீப்பர்-கேப்டன் என்ற வகையில் உலகிலேயே அதிக போட்டிகளில் விளையாடிய வீரர். மொத்தம் 175 போட்டிகளாகும்.

கிளவுஸ் மட்டுமல்ல பேட்டும் பிடிப்போம்
ஒருநாள் போட்டி வரலாற்றில் டோணி அடித்த 183 ரன்கள்தான், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.

ஐசிசியின் செல்லப் பிள்ளை
ஒருநாள் கிரிக்கெட்டுக்காக ஐசிசி தேர்வு செய்யும் உத்தேச அணியில் 8 முறை (7 முறை தொடர்ச்சியாக) இடம் பிடித்த வீரர் டோணி. அதில் 5 முறை இவரை கேப்டனாக அறிவித்தது ஐசிசி.

ஒன்டே கிங்
2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், ஐசிசி சார்பில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வானவர் டோணி.

நாட்டின் கவுரவம்
விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை 2007-08ல் இவர் பெற்றார்.

மக்களின் மனம் கவர்ந்தவர்
ஐசிசியின், மக்கள் விருப்ப விருதை 2013ல் டோணி தட்டிச் சென்றார்.

டாக்டர். டோணி
பிரிட்டனின் டி மோன்ட்போர்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக 2012ல் டோணிக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டது.

எல்லைச்சாமி
2011ல், எல்லை பாதுகாப்பு ராணுவ பிரிவின் சார்பில், கவுரவ பதவி வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications