நியூசிலாந்து அணி வென்றால்.. அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தான் அணி என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறியுள்ளன. 4வது இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. இந்த நிலையில் நியூசிலாந்து அணி தங்களது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக குசல் பெரேரா 28 பந்துகளில் 51 ரன்களும், தீக்சனா 91 பந்துகளில் 38 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர், ஃபெர்குசன் மற்றும் ரச்சின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பெங்களூரு போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் இலங்கை அணி 172 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயித்திருப்பதால், நியூசிலாந்து அணி எளிதாக வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நியூசிலாந்து அணி 172 ரன்கள் இலக்கை 25 ஓவர்களில் எட்டி வெற்றிபெற்றால், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ய்புகள் உள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து 25 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 335 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் ஆடினால், பாகிஸ்தான் அணியின் கனவு முடிவுக்கு வரும்.
ஒருவேளை நியூசிலாந்து அணி 35 ஓவர்களில் 172 ரன்கள் இலக்கை எட்டினால், பாகிஸ்தான் அணி 120 ரன்கள் இலக்கை 6 ஓவர்களிலும், 200 ரன்கள் இலக்கை 7 ஓவர்களிலும் சேஸ் செய்ய வேண்டும். இதற்கு சாத்தியமில்லை என்பதால், பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. இதனால் அரையிறுதி சுற்றில் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை போல் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடும் சூழல் வரும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications