மும்பை: இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதற்கான காரணம் குறித்து அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில் இந்திய அணி தரப்பில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயமடைந்த வீரர்களின் நிலை, இந்திய வீரர்களின் ஃபார்ம், பேக் அப் வீரர்கள் யார் என்று அனைத்து தரப்பிலும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்ற இந்திய அணியுடன் இணைந்தார். இதற்கான காரணங்கள் குறித்து முழுமையான தகவல் வெளியாகாமல் இருந்தது. இருப்பினும் ஆசிய கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதற்காகவே ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் உடன் அஜித் அகர்கர் இணைந்துள்ளார் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்திய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஆசிய கோப்பை தொடருக்குள் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் இருவரும் பயிற்சி வீடியோக்களை வெளியிட்டாலும், ஆசிய கோப்பைக்குள் இந்திய அணிக்கு வருவது கடினம் என்றே என்சிஏ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் தூண்களாக உள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இல்லாததால், மாற்று வீரர்களை தயார் செய்யும் பணியில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இறங்கியுள்ளனர். இதன் காரணமாகவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் களம் காண வாய்ப்புள்ளது. ஒருவேளை இருவரும் பேட்டிங் ஃபார்முக்கு வர அதிக நேரம் எடுத்துக் கொண்டால், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ரோகித் சர்மா, சஞ்சு சாம்சனுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.