கயானா: டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதன் மூலம் இந்தியா கடந்த 2022 உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்குப் பழி தீர்த்துக் கொண்டுள்ளது. இதற்கிடையே இரு போட்டிகளுக்கும் என்ன வித்தியாசம்... இந்த போட்டியில் நாம் வெல்ல என்ன காரணம் என்பதை அஸ்வின் விளக்கியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் இப்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்து வருகிறது. கடந்த ஜூன் 1ஆம் தேதி இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கிய நிலையில், அது இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கன் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.. இந்தச் சூழலில் இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
உலக போட்டி: இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்து இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை அடித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்கள் குவித்தார்.. மிடில் ஆர்டரில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் சேர்த்தனர்.
தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தது. குறிப்பாக இந்தியாவின் ஸ்பீன் பவுலர்கள் இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்துவிட்டனர் என்றே சொல்லலாம். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 103 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய ஸ்பீன்னர்கள் குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளை இழந்தனர். அதேபோல பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பழிதீர்த்த இந்தியா: இந்த இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் இதே அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. அந்த தோல்விக்கு இந்தியா இப்போது பழிதீர்த்துக் கொண்டுள்ளது.
இதற்கிடையே நட்சத்திர இந்திய வீரரான அஸ்வின் இரு போட்டிகளை இந்திய அணி எப்படி எதிர்கொண்டது. அந்த போட்டியில் தோல்வி அடையவும் இந்த போட்டியில் வெல்லவும் என்ன காரணமாக இருந்தது என்பதைத் தனது யூடியூப் சேனலில் அவர் விளக்கியுள்ளார். ஸ்கொயர் ஆஃப் தி பிட்ச் எனப்படும் மேட்ஸ்மேன்களுக்கு பின்புறம் இருக்கும் பகுதியில் நாம் அதிக ரன்களை எடுத்ததே வெற்றிக்கு கை கொடுத்தாக அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வின்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கடந்த 2022 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் நாம் 168 ரன்கள் மட்டுமே எடுத்திருப்போம். அப்போது இங்கிலாந்து ஓபனிங் பேட்ஸ்மேன்கள் 6 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்து இருந்தாலே அவர்கள் எளிதாக வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், அவர்கள் 6 ஓவர்களில் 70 ரன்களை விளாசினார்கள். அங்கேயே கேம் ஓவர்.. அதிரடியாக ஆடி இந்திய டீமை உடைத்தார்கள்.
அந்த அரையிறுதியில் ஸ்கொயர் ஆஃப் தி பிட்ச் (மேட்ஸ்மேன்களுக்கு பின்புறம்) நமக்குக் கிடைத்தது மொத்தமே 12 ரன்கள் தான். அது பவர் பிளே ஓவரில் அடில் ரசீத்திற்கு எதிராக ரோஹித் ஷர்மா அடித்த ஸ்வீப் ஷாட். அதாவது ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஃபிளிப் மூலம் கிடைத்தது 12 ரன்கள் தான். இதுதான் பிரச்சினையாக இருந்தது.
ஸ்கொயர் ஆஃப் தி பிட்ச்: ஆனால், நேற்றைய போட்டியில் மொத்தம் 39 ரன்கள் நமக்கு ஸ்கொயர் ஆஃப் தி பிட்ச் திசையில் கிடைத்துள்ளது. இதுதான் அந்த போட்டிக்கும் இந்த போட்டிக்கும் இடையேயான வித்தியாசம். இந்த 39 ரன்கள்களை நாம் தூக்கிவிட்டால் 145 ரன்கள் தான் அடித்து இருப்போம். அது எளிதாக சேஸ் செய்யும் இலக்காக இருந்து இருக்கும். ரோஹித், சூர்யகுமார் யாதவ் என பலரும் ஸ்வீப் அடித்தார்கள்.
பந்தை நேராக பவுன்டரிக்கு அடிப்பது கடினமாக இருக்கும் இதுபோன்ற சூழல்களில் ஸ்கொயர் ஆஃப் தி பிட்ச் திசையில் ரன்களை குவிப்பது முக்கியமானதாக இருக்கிறது. இதுவே நமது வெற்றிக்கு கை கொடுத்துள்ளது" என்றார்.