அடுத்த டி20 உலககோப்பை எங்கு? எப்போது? இந்திய அணி என்ன மாற்றம் செய்யனும்? அருமையான வாய்ப்பு
மெல்போர்ன் : 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றிலேயே நடையை கட்டியது. தற்போது அரையிறுதி வரை வந்திருக்கிறது.
இது ஒரு நல்ல முன்னேற்றம் என்றாலும் நம்பர் ஒன் அணியாக தரவரிசையில் இருக்கும் இந்தியா உலக கோப்பையை வெல்லாதது மிகவும் வருத்தமான விஷயமாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.

எங்கு நடைபெறுகிறது
இந்த நிலையில் அடுத்த டி20 உலக கோப்பை எங்கு நடைபெறுகிறது என்பதை தற்போது பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு இங்கு டி20 உலக கோப்பை நடந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கரீபியன் தீவுகளில் உலகக் கோப்பை நடக்கிறது.

24 மாதங்கள்
கிட்டத்தட்ட இன்னும் 24 மாதங்கள் உள்ளதால் இந்திய அணி புதிய அணியை உருவாக்க போதுமான காலம் உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகள் நடக்கிறது. இதனால் சீனியர் வீரர்கள் பலர் டி20 கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய அணி
இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி முழுக்க முழுக்க இளம் வீரர்களை வைத்து புதிய அணியை உருவாக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து இஷான் கிஷன், பிரித்விஷா, சஞ்சு சாம்சன், சுப்மான் கில், ரவி பிஷ்ணாய், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் போன்ற வீரர்களை வைத்து இந்திய அணி அடுத்த டி20 உலக கோப்பையை தயார் செய்யலாம்.

அதே பார்முலா
வெஸ்ட் இண்டீஸ் மைதானம் எப்படி செயல்படும். அங்கு எந்த மாதிரி வீரர்கள் தேவை என்பதை தெரிந்து கொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு இந்திய அணி செயல்பட வேண்டும். எப்படி 2007 ஆம் ஆண்டு சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு தோனி தலைமையில் இந்தியா களமிறங்கி கோப்பையை தட்டிச் சென்றதோ, அதே பார்முலாவை இந்திய அணி பயன்படுத்தினால் டி20 உலக கோப்பை நிச்சயம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications