வெறுங்கையில் முழம் போட்டு டோணி செய்த 'வரலாற்று' தவறு... நம்ப முடியாத ஷாக்கில் ரசிகர்கள்!
கொழும்பு: என்னது டோணி கையில் வந்த பந்தை விட்டுவிட்டு, ரன் அவுட்டை மிஸ் செய்தாரா? இதுதான் அந்த காட்சியை பார்த்த ரசிகர்களுக்கு மனதில் எழும் முதல் வார்த்தையாக இருந்திருக்க முடியும். ஏனெனில், சூரியன் மேற்கே உதிப்பதை போன்ற ஒரு அரிய நிகழ்வு அது.
சில நேரங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை பார்க்க ஏதாவது புண்ணியம்தான் செய்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் நேரலையில் அதை பார்த்திராவிட்டால் அந்த சம்பவத்தை அறிந்துகொள்ளுங்கள்.
நாளைக்கு வரும் சந்ததிகளும் அதை படித்து பார்த்து பயன்பெறட்டும் (ஹிஹிஹி).

இலங்கைக்கு எதிராக
இந்த 'வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்' கடந்த 27ம் தேதி இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்தான் நடைபெற்றது. 25வது ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. சண்டிமால் தனது லெக் திசையிலல் பந்தை அடித்துவிட்டு ரன் ஓட எத்தனித்தார்.

பந்தை பிடித்தார்
ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த கேப்டன் விராட் கோஹ்லி உடனடியாக பந்தை பிடித்து விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். ஸ்பின் பந்து வீச்சாளர் ஓவர் என்பதால் ஸ்டம்புக்கு பக்கத்தில்தான் நின்றிருந்தார் டோணி. பந்தையும் சரியாக பிடித்துவிட்டார்.
கோட்டைவிட்ட டோணி
டோணி கையில் பந்து வந்து சேர்ந்தபோது சண்டிமால் கிரீசுக்கு அருகே கூட வரவில்லை. ஆனால் ஸ்டெம்பை பந்தை பிடித்திருந்த கரங்களால் அடித்து ரன்அவுட் செய்ய முற்படுகையில், எதிர்பாராத விதமாக பந்து ஸ்லிப்பாகி போய்விட்டது. வெறுங்கையில் ஸ்டெம்பை அடித்தார் டோணி. இதனால் ரன்அவுட்டுக்கான அப்பீல் செய்ய முடியவில்லை.

காப்பாற்றிய டோணி
டோணி ஸ்டெம்பை அடித்தபோதும் சண்டிமால் கிரீசுக்கு உள்ளே வரவில்லை. எனவே பந்து மட்டும் கைக்குள்ளேயே இருந்திருக்குமானால், அது எளிதான ரன் அவுட்டாக இருந்திருக்கும். கோஹ்லி உட்பட சக வீரர்கள் இந்த காட்சியை பார்த்துவிட்டு, அப்படியே ஷாக்காகிவிட்டனர். ரசிகர்களும்தான். இருப்பினும் இலங்கை 217 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. டோணி முக்கிய நேரத்தில் அரை சதம் அடித்து அணியை வெற்றிபெறச் செய்து, தனது தவறுக்கு அதே போட்டியில் பிராயச்சித்தம் செய்துகொண்டார்.


Click it and Unblock the Notifications