சென்னை: லக்னோ அணியின் ஜெய்தேவ் உனாத்கட் மோசமாக பந்துவீசும் போது அதிக தொகைக்கு வாங்கப்பட்டதாகவும், சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ள போது போதுமான தொகை ஏலத்தில் கொடுக்கப்படவில்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் முதல் போட்டியில் வெற்றிபெறுவதற்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ அணி, முதல் சீசனிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
கடந்த ஆண்டு மிஸ்ஸான கோப்பையை, இம்முறை கைப்பற்ற லக்னோ அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லக்னோ அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளரான மோசின் கான் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதனால் லக்னோ அணியின் பந்துவீச்சு பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் அவருக்கான பேக் அப் வீரராக உனாத்கட் களமிறங்குவார் என்று சொல்லப்படுகிறது. அண்மை காலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் ஜாம்பவான் அளவிற்கு ஆல் ரவுண்டராக முன்னேறி இருக்கிறார் உனாத்கட். அதுமட்டுமல்லாமல் 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐபிஎல் ஆடி வந்தவர் உனாத்கட். சில மாதங்களுக்கு முன் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்து கம்பேக் கொடுத்து உற்சாகத்தில் இருக்கிறார்.
இதனால் உனாத்கட்-க்கு இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெவ்வேறு மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால், உனாத்கட்டின் அனுபவம் லக்னோ அணிக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உனாத்கட் பற்றி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ள கருத்து ரசிகர்களிடையே விவாதமாக வருகிறது.

உனாத்கட் பற்றி ஆகாஷ் சோப்ரா பேசுகையில், கடந்த சீசனில் உனாத்கட் மும்பை அணிக்காக விளையாடினார். தற்போது லக்னோ அணியில் இணைந்துள்ளார். ஏகானா மைதானம் பெரியது என்பதோடு, அந்த மைதானத்தில் உனாத்கட் பந்துவீச்சு நிச்சயம் எடுபடும். அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக உனாத்கட் சிறந்த பந்துவீச்சாளராக வளர்ந்து வருகிறார். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது அதிக தொகையை உனாத்கட்-க்கு சம்பளமாக கொடுத்தார்கள்.
ஆனால் சிறப்பாக செயல்பட தொடங்கும் போது பெரியளவில் பணம் கிடைக்கவில்லை என்பது தான் வினோதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.11.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டவர் உனாத்கட். அதன் பின்னர் மீண்டும் ராஜஸ்தான் ராயல் அணியாலேயே 8.4 கோடி ரூபாய்க்கும், 2022ஆம் மும்பை அணியால் 1.3 கோடி ரூபாய்க்கும் வாங்கப்பட்ட உனாத்கட், நடப்பாண்டில் லக்னோ அணியால் ரூ.50 லட்சத்திற்கு மட்டுமே ஏலத்தில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.