ஐபிஎல் அணிகளால் தக்க வைத்த வீரர்களில் தேறியவர்கள் யார் யார் தெரியுமா?
Recommended Video

டெல்லி: ஐபிஎல் டி-20 போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் சில வீரர்களை தக்க வைத்தன. அவ்வாறு தக்க வைத்த வீரர்களில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் தேறியவர்கள் யார் யார் என்பதுதான் தற்போது பேச்சாக உள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளதால், அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடந்தது. அதில் ஒவ்வொரு அணியும், தங்களுடைய அணிக்காக முன்பு விளையாடிய மூன்று வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்தது. சென்னை அணியின் ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு உள்ளது. இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் கேப்டன்சியிலும் பேட்டிங்கிலும் தோனி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். சுரேஷ் ரெய்னா, மீண்டும் பார்முக்கு திரும்பி, அணிக்கு மிகப் பெரிய பலமாக உள்ளார். அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா, இதுவரை பேட்டிங்கில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, அதற்கு அதிக வாய்ப்பும் கிடைக்கவில்லை. பவுலிங்கில் சராசரியாக ஒரு போட்டியில் இரண்டு ஓவர்களை வீசியுள்ளார். ஆனால், இதுவரை ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.
கேப்டன் விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சர்பராஸ் கான் ஆகியோரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது. இதில் கோஹ்லி 317 ரன்களும், டிவில்லியர்ஸ் 280 ரன்களும் இதுவரை எடுத்துள்ளனர். இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள சர்பராஸ் கான், 6, 0, 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சர்பராஸ் கான் சரியான அளவுக்கு தன்னுடைய பங்களிப்பை அளிக்கவில்லை.

ஐயருக்கு பதவி உயர்வு
டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரிஷப் பந்த், கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தக்க வைத்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் புதிய கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ரிஷப் பந்த் இதுவரை 227 ரன்கள் எடுத்து தக்க வைத்ததை நியாயப்படுத்தியுள்ளார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள மோரிஸ், 46 ரன்களும் மூன்று விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நிரூபித்த நரேன், ரசல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்திய வீரர்களை தவிர்த்து, சுனில் நரேன், ஆந்தரே ரசல் என்ற இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்தது. இருவரும் மோசமான தேர்வு இல்லை என்பதை இதுவரை நிரூபித்துள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தக்க வைக்கப்பட்ட ஒரே வீரான அக்சர் படேல், முதல் ஆட்டத்தின்போது காயமடைந்தார். சீசனின் கடைசி சில ஆட்டங்களுக்கு அவர் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலக்கும் மும்பை வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டயா, ஜஸ்பிரித் பும்ராவை தக்க வைத்தது. இந்த சீசனில் மும்பை அணி மிகச் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், மூவரும் தங்களுடைய தேர்வு சரிதான் என்பதை நிரூபித்து வருகின்றனர். பாண்டயா பேட்டிங்கில் பெரிய அளவுக்கு சாதிக்கவில்லை.

ராஜஸ்தான், ஹைதராபாத்துக்கு ஏமாற்றம்
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ஏலம் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், அவர் இந்த சீசனில் விளையாடவில்லை. இதேபோன்ற நிலையில்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ஏற்பட்டது. அணிக்காக தக்க வைக்கப்பட்ட டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டார். அதே நேரத்தில் அணி தக்க வைத்த மற்றொரு வீரரான புவனேஸ்வர் குமார், 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications