
டர்ன்பிரிட்ஜில் பின்னி எடுத்த கபில்தேவ்
1983ம் ஆண்டு கபில் தேவ், உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் முதல் சதத்தைப் போட்டார். அப்போது ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றேயாக வேண்டிய இக்கட்டு. கவாஸ்கர் உள்பட பலரும் சொதப்பி விட்ட நிலையில் சிங்கிள் மேனாக, சிங்கம் போல ரன்களைக் குவித்து வெளுத்தார் கபில்தேவ். அப்போட்டியில் கபில் 175 ரன்களைக் குவித்தார். உலக அளவில் மிகவும் பிரபலமான ஆட்டங்களில் இதுவும் ஒன்றாக இன்று வரை இருக்கிறது. அந்தத் தொடரில் இந்தியா கோப்பையையும் வென்று வந்தது நினைவிருக்கலாம்.

முதல் இரு தொடர்களில் ஒரு சதமும் போடாத இந்தியா
1975 மற்றும் 1979 ஆகிய இரு தொடர்களிலும் இந்திய வீரர்கள் ஒரு சதம் கூட போடாமல் சுருண்டு வந்தார்கள்.

ராசியான 1999, 2011
1999 மற்றும் 2011 தொடர்கள்தான் இந்தியாவுக்கு மிகவும் ராசியான உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களாகும். இந்தத் தொடர்களில் இந்தியா தலா 5 சதங்களைப் போட்டது.

முதல் சதம் முதல் கடைசி வரை
1983ம் ஆண்டு கபில் தேவ் சதம் போட்டதைத் தொடர்ந்து 87ல் கவாஸ்கர் 103 ரன்கள் எடுத்தார். 1996ல் சச்சின் 127 விளாசினார். அதே தொடரில் சச்சின் இலங்கைக்கு எதிராக 137 ரன்களைக் குவித்தார்.

காம்ப்ளி 106
அதே தொடரில் வினோத் காம்ப்ளி 106 ரன்களை எடுத்தார். 1999 தொடரில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிராவிட் 104 ரன் விளாச, சச்சின் 140 ரன்களைக் குவித்தார்.

டிராவிட் - கங்குலி
அதே தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் கங்குலி 183 ரன்களைக் குவித்தார். டிராவிட் தன் பங்குக்கு 145 ரன்களை விளாசினார்.

ஆஸியை வெளுத்த அஜய் ஜடேஜா
அத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அஜய் ஜடேஜா, 100 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2003ல் 4 சதம்
2003ம் ஆண்டு தொடரில் நான்கு சதங்களை இந்தியா போட்டது. டெண்டுல்கர் 152 ரன் எடுத்தார். கங்குலி மற்ற மூ்ன்று சதங்களையும் (112, 107, 117) போட்டார்.

2007ல் ஒன்றே ஒன்று
2007ம் ஆண்டு ஒரு சதம் மட்டுமே கிடைத்தது. அதைப் போட்டவர் வீரேந்திர ஷேவாக். பெர்முடாவுக்கு எதிராக 114 ரன்களை அவர் எடுத்தார்.

2011ல் 5
கடந்த 2011 தொடரில் இந்தியாவுக்கு ஐந்து சதங்கள் கிடைத்தன. அதில் டெண்டுல்கர் 2 சதம் (111, 120) போட்டார். யுவராஜ் சிங் 113 எடுத்தார். விராத் கோஹ்லி 100 அடித்தார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷேவாக் 175 ரன்களை விளாசினார்.

அதிக சதம் போட்ட கில்லாடிகள்
இந்தியத் தரப்பில் அதிக சதம் அடித்தவர் டெண்டுல்கர்தான். மொத்தம் 6 செஞ்சுரிகள். 2வது இடம் கங்குலிக்கு, 4 சதங்கள். டிராவிட், ஷேவாக் ஆகியோர் தலா 2 சதம் போட்டுள்ளனர். கபில் தேவ், கவாஸ்கர், காம்ப்ளி, ஜடேஜா, கோஹ்லி, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு சதம் போட்டுள்ளனர்.
இந்தத் தொடரில் என்ன கிடைக்குமோ.. எத்தனை கிடைக்குமோ.. காத்திருப்போம்!


Click it and Unblock the Notifications











