ஐபிஎல் 16ஆம் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி காயம் காரணமாக தொடரிலிருந்து முழுமையாக வெளியேறி இருக்கிறார். கடந்த சீசனில் முகேஷ் சவுத்ரியை வைத்து தான் கேப்டன் தோனி போட்டிகளில் விளையாடினார். தற்போது இந்த சீசனில் அவருடைய பந்துவீச்சு மெருகேறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முக்கிய கட்டத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய வேக பந்துவீச்சாளர்களில் அனுபவ வீரராக தீபக் சாகர் மட்டும் தான் இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே யாரை தேர்வு செய்யும் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பிறந்த ஆகாஷ் சிங் என்ற 20 வயது வீரரான இடது கை வேகப்பந்து வீச்சாளரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. ஆகாஷ் சிங் ராஜஸ்தானில் பிறந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் நாகாலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். அண்டர் 19 இந்திய அணியில் இடம் பெற்ற ஆகாஷ் சிங் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்தார்.
அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஆகாஷ் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 2020 ஆம் ஆண்டு ஒடிசா அணிக்கு எதிராக 50 ஓவர் போட்டியில் ஆகாஷ் சிங் 29 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிய தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை.
இதுவரை டி20 போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடி ஏழு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இதில் அவருடைய எக்கனாமி 7.87 ஆகும். 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளையும் 5 ரஞ்சி டெஸ்டில் விளையாடி 10 விக்கெட்டுகளையும் ஆகாஷ் சிங் வீழ்த்தி இருக்கிறார்.
.ஆகாஷ் சிங் வெறும் 20 வயதான வீரர் என்பதால் அவருக்கு இந்த சீசன் நல்ல ஒரு பாடமாக அமையும். ஆகாஷிங் நல்ல வேகத்தில் பந்துகளை இன்சுவிங் செய்வதில் வல்லவராக விளங்குகிறார். இதிலும் தோனி இவரை எப்படி பயன்படுத்துவார்? தோனி இவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஆகாஷ் காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.