சிறந்த ஆல்ரவுண்டர் யார்... மறக்க முடியுமா... கபில் தேவுடன் இம்ரான் கானின் அந்த போட்டியை!
Recommended Video

டெல்லி: கிரிக்கெட் உலகின் மிகவும் போற்றப்படும் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் பாகிஸ்தானின் இம்ரான் கானும், இந்தியாவின் கபில்தேவும். இருவரில் சிறந்தவர் யார் என்ற விவாதம் இன்றும் தொடர்கிறது. ஆனால், கிரிக்கெட்டைத் தவிர்த்து பார்த்தால், சிறந்த ஆல்ரவுண்டராக இம்ரான் கான் தற்போது தேறி உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக உள்ளது. பாகிஸ்தானின் அடுத்தப் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
கிரிக்கெட்டில் மிகப் பெரிய சாதனைகளை அவர் படைத்துள்ளார். 1970 மற்றும் 1980களில் கிரிக்கெட் உலகில் இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூசிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹேட்லி ஆகியோர் சிறந்த ஆல் ரவுண்டர்களாக இருந்தனர்.
இருந்தாலும், உலகம் முழுவதும், குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானில், சிறந்த ஆல் ரவுண்டர் கபில் தேவா, இம்ரான் கானா என்று கடுமையாக விவாதம் நடந்தது. இருவரும் தங்களுடைய நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன், பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் எந்த நேரத்திலும் நம்பக் கூடிய ஆல் ரவுண்டர்கள். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல. இருவரில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற விவாதம் தற்போதும் நடக்கிறது.

டெஸ்ட் பேட்டிங்
கபில்தேவ் 131 டெஸ்ட்களில் 31.05 சராசரியுடன் 5,248 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 8 சதம், 27 அரைசதம் அடங்கும். இம்ரான் 88 டெஸ்ட்களில் 6 சதம், 18 அரை சதங்களுடன் 3,807 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் என்ற அடிப்படையில் கபில் முன்னிலையில் உள்ளார். ஆனால் இம்ரானின் சராசரி 37.69 சதவீதமாகும்.

டெஸ்ட் பவுலிங்
434 விக்கெட்கள் வீழ்த்தி உலகச் சாதனையைப் புரிந்தவர் கபில்தேவ். அவர் சராசரியாக ஒரு விக்கெட்டை வீழ்த்த 29.64 ரன்கள் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் 362 விக்கெட்களை வீழ்த்தியுள்ள இம்ரானின் சராசரி 22.81 ரன்களாகும்.

ஒன்-டே பேட்டிங்
175 ஆட்டங்களில் இம்ரான் 3,709 ரன்கள் எடுத்துள்ளார். கபில் 225 ஆட்டங்களில் 3,783 ரன்கள் எடுத்துள்ளார். கபிலின் 95.07 ஸ்டிரைக் ரேட்டோடு ஒப்பிடுகையில் இம்ரானின் ரேட் 72.65 தான். அதாவது கபில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் எடுத்துள்ளார்.

ஒன்-டே பவுலிங்
கபில் 253 விக்கெட்களையும், இம்ரான் 182 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். சராசரியை ஒப்பிட்டால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் உள்ளனர். இம்ரான் 26.61 சராசரி என்றால் கபில் 27.45. ஒட்டுமொத்தமாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கபிலைவிட இம்ரான் சற்று முன்னிலையில் உள்ளார். ஆனால், இம்ரானைவிட அதிக காலம், அதிகப் போட்டிகளில் கபில் பங்கேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications