பரோடா: இந்திய கிரிக்கெட்டில் புதிய பாண்டியா உதித்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பையில் பரோடா அணிக்காக விளையாடி வரும் 19 வயதே ஆன நித்யா பாண்டியா, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். யார் இந்த நித்யா பாண்டியா? இவருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தேடிக்கொண்டிருக்கும் அந்த இளம் வீரரைப் பற்றிய முழு விவரத்தை பார்க்கலாம்.
2025-ம் ஆண்டின் கடைசி நாளில் (டிசம்பர் 31) பரோடா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் நித்யா பாண்டியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். பரோடா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய நித்யா பாண்டியா, 110 பந்துகளில் 122 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 12 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம்.

மற்றொரு தொடக்க வீரரான அமித் பாசியுடன் (127 ரன்கள்) இணைந்து முதல் விக்கெட்டுக்கு 230 ரன்களை குவித்து பிரம்மாண்டமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இவர்களின் இந்த அதிரடியால் பரோடா அணி 417 ரன்களைக் குவித்தது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற சிறிய ஊரில் 2006-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிறந்தவர் தான் நித்யா பாண்டியா. சிறுவயது முதலே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட இவர், இடதுகை பேட்ஸ்மேன். ராஜஸ்தானில் போதிய கிரிக்கெட் வசதிகள் இல்லாததால், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன் தனது தந்தை மற்றும் குடும்பத்துடன் குஜராத்தின் வதோதராவுக்கு (Baroda) குடிபெயர்ந்தார்.
நித்யா பாண்டியாவின் பெயரைக் கேட்டவுடன், இவர் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் உறவினரோ அல்லது தம்பியோ என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. நித்யா பாண்டியா இவர்களுக்கு உறவினர் இல்லை.
சொல்லப்போனால், ஹர்திக் மற்றும் க்ருனால் பாண்டியா கிரிக்கெட்டில் சாதித்ததைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, தானும் அவர்களைப் போல சாதிக்க வேண்டும் என்று தான் நித்யா பரோடாவுக்கே வந்துள்ளார். இப்போது அதே பரோடா அணியில், க்ருனால் பாண்டியா தலைமையின் கீழ் சதம் அடித்து தனது ஆதர்ச நாயகர்களான பாண்டியா சகோதரர்களுடன் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
நித்யா பாண்டியா திடீரென வந்த வீரர் இல்லை. ஜூனியர் கிரிக்கெட்டிலேயே தனது திறமையை நிரூபித்தவர். இந்திய அண்டர்-19 அணிக்காக விளையாடியுள்ள இவர், ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கு எதிராக 94 ரன்களை விளாசி அப்போதே தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பரோடா அண்டர்-19 அணியிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கூச் பெஹார் போன்ற சில உள்ளூர் தொடர்களில் ரன் மெஷினாக வலம் வந்தவர்.
வெறும் 19 வயதில், சீனியர் கிரிக்கெட்டில் நுழைந்து, அனுபவ வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. நித்யா பாண்டியாவிடம் ஒரு முதிர்ச்சியான ஆட்டம் தெரிகிறது. "பாண்டியா என்றாலே அதிரடி தான்" என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் இந்த 'ஜூனியர்' பாண்டியா. 2026-ம் ஆண்டு இவருக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஐபிஎல் அணிகளின் கண்களில் இவர் சிக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!