சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் மூத்த வீரர் இஃப்திகார் அஹ்மத் தனியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இதுவொரு பக்கம் இருக்க, பாகிஸ்தான் அணி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தது. அப்போது விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாகிஸ்தான் அணி வீரர்கள், உடனடியாக ஆலோசனை மேற்கொண்டனர்.
விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி இருவரும் ஷதாப் கானுக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த இஃப்திகார் அஹ்மத், தனியாக பேசிக் கொண்டிருந்துள்ளார். இது தொலைக்காட்சியில் நேரலையின் போது ஒளிபரப்பான நிலையில், இஃப்திகார் அஹ்மத் யாருடன் பேசிக் கொண்டிருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒரு கையை இடுப்பில் வைத்து கொண்டு இன்னொரு கையை நாடியின் அருகே வைத்திருப்பதால், மறைமுகமாக மைக் வைத்து ஓய்வறையில் உள்ள நிர்வாகிகளுடன் பேசுகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் சூழலில், தற்போது இஃப்திகார் அஹ்மத் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டிக்கு பின் இஃப்திகார் அஹ்மத் பேசுகையில், இந்த ஆடுகளம் 300 ரன்கள் குவிக்கக் கூடிய வகையிலான ஆடுகளம் தான். பேட்டிங்கில் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆனால் சுழற்பந்துவீச்சு தான் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. எல்லாவற்றையும் விட ஃபீல்டிங் அதிக தவறுகளை செய்து வருகிறோம். உலகத்தரம் அணிகளுக்கு எதிரான ஏதாவது ஒன்றில் தவறு செய்தாலும் தோல்வி தான் கிடைக்கும். பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் அனைத்திலும் முன்னேற்றம் தேவை என்று கூறினார்.