அருண்குமார் மாணிக்கவாசகம்: நியூசி, கிரிக்கெட்டில் முதல் இந்திய ஸ்கோரர்.. சென்னை வாலிபரின் பயணம்!
சென்னை: நியூசிலாந்து நாட்டின் ஸ்கோரர் குழுவில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் எப்படியாவது விளையாடி விட வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அதில் சிலர் அயல்நாட்டு அணிகளுக்காகவும் விளையாடுகின்றனர்.
ஆனால் சென்னையை சேர்ந்த அருன்குமார் மாணிக்கவாசகம் என்ற இளைஞர் கிரிக்கெட் வீரராக நினைத்து தற்போது அதற்கு ஒருபடி மேல் சென்றுள்ளார்.

யார் இந்த அருண்குமார்
30 வயதாகும் அருண் குமார் மாணிக்கவாசகம் சென்னையை சேர்ந்தவர். 10ம் வகுப்பு வரை அங்கு படித்த அவர், கர்நாடகாவில் உள்ள மணிபால் பல்கலைகழக்கத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு மும்பையில் உள்ள ஐஐடியில் இண்டர்ன்ஷிப் செய்ததோடு மட்டுமல்லாமல் 2014ம் ஆண்டு நியூசிலாந்தில் மெக்கானிக்கல் இண்ஜீனியரிங் பிரிவில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.

அருணின் திருப்புமுனை
சிறுவயது முதலே தோனியின் ரசிகனாக இருந்த அருண் குமாருக்கு, நியூசிலாந்தின் கிளப் அணிகளில் கிரிக்கெட் ஆடியுள்ளார். ஆனால் அது சரிவரவில்லை. இதன் பின்னர் அவருக்கு 2015ம் ஆண்டு உலகக்கோப்பை திருப்புமுனை தந்தது. நியூசிலாந்தில் நடந்த அந்த தொடரில் பந்துகளை எடுத்துக் கொடுக்கும் "பால் பாயாக" சேவை செய்தார்.

ஸ்கோர் பணி வாய்ப்பு
அதில் சில நட்புகளை வளர்த்துக் கொண்ட அவருக்கு சில நாட்களில் நியூசிலாந்தில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் இருந்து பால் ஸ்கோரர் பணி வாய்ப்பு வந்தது. அதாவது போட்டியின் போது மைதானத்தில் உள்ள டிஜிட்டல் பலகையில் ஸ்கோரை மாற்ற வேண்டும். அந்த பணி அவருக்கு பிடித்துப்போக ஒவ்வொரு பந்திற்கும் ஸ்கோரை மாற்றி வந்தார். ஆனால் இந்த பணியை வாரத்தின் சனிக்கிழமை நாட்களில் மட்டும் பகுதி நேர பணியாக செய்து வந்தார்.

புதிய பணி
அதன் பிறகு அருணின் வளர்ச்சி ஏகபோகத்திற்கு இருந்தது. 2018ல் நடந்த U19 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்கோரர் வரவில்லை. இதனால் அவசர அவசரமாக அழைக்கப்பட்ட அருண் குமார் அந்த தொடரில் ஸ்கோரராக பணி நிமர்த்தப்பட்டார். இதன் மூலம் அவரின் முழு நேர பணியாக கிரிக்கெட் மாறியது. ஒவ்வொரு போட்டிக்கும் அணிகளுடனே சென்று பணி புரிவார்.

அசத்தல் சாதனை
இந்நிலையில் தற்போது அவருக்கு நியூசிலாந்தின் தேசிய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் நடுவர்களுக்கென எப்படி சங்கம் உள்ளதோ, அதே போன்று ஸ்கோரர்களுக்கும் சங்கம் உள்ளது. அதன்படி நியூசிலாந்தின் ஸ்கோரர் சங்கத்தில் முதல் இந்தியராக இடம்பிடித்து அருண்குமார் அசத்தியுள்ளார். அவரின் பயணம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications