மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விராட் கோலி தலைமையே இதற்கு பரவாயில்லை என்றும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தடுமாறி வருவதாகவும் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரோகித் சர்மா வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் கேப்டன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால் புதிய கேப்டன் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரிஷப் பந்த். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரே பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பந்த் தான்.
ரிஷப் பந்த் தனி ஆளாக நின்று பல போட்டிகளை இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று தந்திருக்கிறார். மேலும் அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் தோனியை போல் கேப்டன்சி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு வயது மிகக் குறைவு என்பதால் பல சாதனைகளை செய்யலாம் என்றும் தெரிகிறது. இதன் காரணமாக தான் அவருக்கு முதல் வாய்ப்பு என கூறப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் கே எல் ராகுல். ஏற்கனவே ரோகித் சர்மா காயம் காரணமாக வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பெறாத நிலையில் அப்போது கே எல் ராகுல் தான் கேப்டன் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் அந்த தொடரில் கே எல் ராகுல் சொதப்பினார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் கேப்டன்சியில் முன்னேற்றம் தெரிந்தது.
மேலும் அவர் ஒரு ஸ்டார் பேட்ஸ்மேன் என்பதால் கே எல் ராகுலுக்கு கேப்டன் பதவி கொடுக்க பிசிசிஐ யோசித்து வருகிறது. எனினும் அவருடைய பேட்டிங் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து பிசிசிஐ முடிவு எடுக்கும்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ரகானே ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் கேப்டனாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை வென்று கொடுத்திருக்கிறார். தற்போது பேட்டிங் ஃபார்முக்கு ரகானே திரும்பி இருக்கிறார். இதனால் அவருக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் அவருடைய வயது இதற்கு தடையாக இருக்கலாம்.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் அஸ்வின். அஸ்வின் முன்னணி பந்துவீச்சாளராக விளங்குகிறார். அவருக்கு கிரிக்கெட் நுணுக்கங்கள் அதிகமாக தெரிகிறது. இதனால் அஸ்வினை கேப்டனாக செயல்பட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும் அவருக்கு 36 வயதாகிவிட்டது இதனால் வயது அவருக்கு தடையாக இருக்கலாம். மேலும் கில் பெயரும் இந்த ஆலோசனையில் அடிபடுகிறது.