மும்பை : ஐசிசி உலக கோப்பை தொடரில் மற்ற அணிகள் எல்லாம் தங்களுடைய நட்சத்திர வீரர்கள் இல்லை என்றால் தர்ம அடி வாங்குகிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான் அணியில் முக்கிய வேகபந்துவீச்சாளர் நஷிம் சா இல்லாததால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு வெகுவாக பாதிக்கப்பட்டது.
இது போன்று நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் ஆகியோர் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்கள். இதெல்லாம் அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தது.

ஆனால் இந்திய அணியில் நட்சத்திர வீரராக கருதப்பட்ட ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இல்லை. இருப்பினும் இந்திய அணி தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அணிக்கு திரும்பிய முகமது சமி அபாரமாக பந்து வீசி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட், இங்கிலாந்துக்கு எதிராக நான்கு விக்கெட் என பட்டையை கிளப்பி வரும் முகமது சமி அணியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வந்த முகமது சமியை தூக்க முடியாத அளவிற்கு அவர் சிறப்பாக பந்து வீசிவிட்டார். இதனால் யாரை நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை சேர்ப்பது என்ற குழப்பத்தில் ரோகித் சர்மா இருக்கிறார்.

தற்போது இந்திய அணியில் ஓரளவுக்கு பேட்டிங்கில் தடுமாறுகிறார் என்றால் அது ஸ்ரேயாஸ் ஐயர் தான். ஸ்ரேயாஸ் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் தான் குறிப்பிடத் தகுந்த வகையில் விளையாடினார். இதனால் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால் ஸ்ரேயாஸை தூக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம் என்ற முடிவில் ரோகித் சர்மா இருக்கிறார். இதன்மூலம் கே எல் ராகுலுக்கு நான்காவது இடத்திற்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு ஏற்படும். ஐந்தாம் இடத்தில் ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் ஏழாவது இடத்தில் ஜடேஜா என்ற வகையில் பேட்டிங் வரிசை மாற வாய்ப்பு இருக்கிறது.