சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றி மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் அடுத்த சீசனில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கேப்டன் தோனி தமது ஓய்வு குறித்து இன்னும் ஒன்பது மாதங்களில் உடல் தகுதியை வைத்து முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு, கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணியில் ராயுடு இடத்திற்கு யார் வருவார் என்பதை தற்போது பார்க்கலாம். அம்பத்தி ராயுடு இடத்திற்கு இந்திய வீரர்கள் வந்தால் சரியாக இருக்கும்.
இதனால், அந்த இடத்திற்கு முதலில் ஷேக் ரஷீத்துக்கு தான் வாய்ப்பு இருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷேக் ரஷீத் அண்டர் 19 இல் கலக்கியவர். அதிரடியாக விளையாடக்கூடிய வீரராக விளங்கும் ஷேக் ரசித் ஃபீல்டிங்கில் கில்லி போல் இருப்பார். ரஷித்தின் முழு திறமையை இன்னும் யாரும் அறியவில்லை. ஆனால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
இதனால் ஷேக் ரஷித்துக்கு அடுத்த சீசன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சேனாபதி .ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சேனாபதி தொடக்க வீரராக உள்ளூர் போட்டிகளில் கலக்கியிருக்கிறார். முதலாம் குவாலிபையரில் ஃபீல்டிங்கிலும் அவர் முக்கிய ரன் அவுட் ஒன்றை செய்தது நினைவிருக்கலாம்.அதிரடியாக ஆடக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. இருப்பினும் அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
ராயுடுவின் இடத்திற்கு வர சரியான மாற்று வீரராக சேனாபதி இருப்பார் என எதிர்பார்க்கலாம். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் நிஷாந்த் சிந்து. சென்னை சூப்பர் கிங்ஸின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக இவர் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஜடேஜாவை போலவே சுழற்பந்து மற்றும் பேட்டிங்கில் அசத்தக்கூடியவர். நிஷாந்த் சிந்துக்கு இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் பிளேயிங் லெவனுக்கு வந்தால் சிஎஸ்கே வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இன்னும் பலமாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்தப் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு சி எஸ் கே இவரை ஏலத்தில் எடுத்தும் நடப்பு சீசனில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டும் தான் விளையாடினார். பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய முழு திறமையையும் இந்த ஐபிஎல் இல் வெளிகாட்டவில்லை. ஆனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். ராயுடு போன்ற ஒரு வீரருக்கு மாற்று வீரராக பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவது சென்னையின் ஒட்டுமொத்த பலத்தையும் அதிகரிக்கும்.