
தடுமாறிய இந்தியா
இந்திய அணியில் முதலில் ரோஹித் ஷர்மா, க்றிஸ் வோக்ஸின் பவுன்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி 11 ரன்களில் வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சொதப்பிய ராகுல், இந்த போட்டியிலும் அதே மோடில் விளையாடினார். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார்.

63 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். பிறகு துணை கேப்டன் 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நிர்கதியாய் நின்றது. எப்படியும் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிடுமே என்று எதிர்பார்த்த நிலையில், அற்புதமாக விளையாடினார் ஷர்துல் தாகூர். 36 பந்துகளை சந்தித்த ஷர்துல் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது. இல்லையெனில், இந்திய அணி வெறும் 130 ரன்களில் சுருண்டிருக்கும். இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

முறியடிக்கப்படாத சாதனை
31 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், ஒரு புதிய சாதனையையும் ஷர்துல் படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் போட்டிகளில், அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை ஷர்துல் பெற்றுள்ளார். ஆம்! முதல் இடத்தில், இந்திய அணியின் லெஜண்ட் ஆல் ரவுண்டர் கபில் தேவ் இருக்கிறார். இவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்ததே, இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. எனினும், ஷர்துல் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 32 பந்துகளில் அரைசதம் அடித்து ஷேவாக் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

பின்னடைவு
இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பும்ராவின் ஓரே ஓவரில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் வெளியேறினார்கள். பர்ன்ஸ் 5 ரன்களில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாக, ஹஸீப் எட்ஜ் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பிறகு, 3வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், டேவிட் மலன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், இந்த தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி 21 ரன்களில் வெளியேறினார். அதுவும், முதல் நாள் ஆட்டம் முடியவிருந்த நேரத்தில், அவர் அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2வது இன்னிங்ஸ் பேட்டிங்
இதில், இப்போது வரை இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. எப்படியும் இந்திய அணியை விட முன்னிலை பெறும் என்பது உறுதி. குறிப்பாக, அரைசதம் அடித்த ஓலே போப் களத்தில் இருக்கிறார். எப்படியும் இந்திய அணியை விட 50 - 70 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கலாம். இங்கு பிரச்சனையே பிட்ச் தான். பந்து அருமையாக ஸ்விங் ஆகிறது. இங்கிலாந்து பவுலர்கள் அந்த ஸ்விங் தன்மையை அபாரமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துகளில் ஸ்விங் அந்த அளவுக்கு இருப்பதில்லை. இந்த இடத்தில் தான் இரு அணிகளின் வெற்றி வாய்ப்பு சூட்சமமே அடங்கியுள்ளது. அதாவது, 2வது இன்னிங்ஸில், இங்கிலாந்தின் அபார ஸ்விங் அட்டாக்கை எதிர்கொண்டு இந்தியா 250 - 300 ரன்கள் அடித்துவிட்டால், இந்தியா ஓரளவுக்கு வெற்றிப் பெற பாடுபடலாம். அதுவே, இங்கிலாந்து ஸ்விங் பவுலிங்கில் சிக்கி இந்தியா 200 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகிறது என்றால், இங்கிலாந்துக்கு 110 - 130 ரன்கள் டார்கெட்டாக அமையும். அப்போது நிச்சயம் இங்கிலாந்து வெற்றிப் பெற்றுவிடும். ஸோ, இரண்டாவது இன்னிங்சில் இந்தியா எப்படி பேட்டிங் செய்கிறது என்பதை பொறுத்தே, கோலி படையின் வெற்றி வாய்ப்பு அடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











