அபிஷேக் சர்மா-க்கு மட்டும் ஏன் இவ்வளவு வாய்ப்பு? சாம்சனுக்கு ஏன் தர மாட்றீங்க? ஸ்ரீகாந்த் கேள்வி
ஹராரே: ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு, இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தொடரில் இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன் சிறந்த ஃபார்மில் இல்லை.
இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் இருந்தாலும், அபிஷேக் சர்மா பேட்டிங்கில் தடுமாறுகிறார்.எதிரணி பந்துவீச்சாளர்கள் அவரது பலவீனத்தை கண்டறிந்துவிட்டதால், அபிஷேக் ரன் குவிக்க மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், கிரீஸில் அதிக நேரம் செலவிட பழக வேண்டும் என்றும் கிரிஸ் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர். "அபிஷேக் சர்மாவை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது. திடீரென அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்று நம்புகிறேன். ரன் குவிப்பதற்கு அவர் மாற்று வழியைக் கண்டறிய வேண்டும். அல்லது ஆரம்பத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக விளையாட வேண்டும். அவர் நினைத்தால் அதிரடியாக விளையாடக்கூடிய திறமை கொண்டவர்.
விக்கெட்டை எளிதில் பறிகொடுப்பதற்கு பதிலாக, முதலில் 100 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிவிட்டு, பின்னர் அதை 200 ஆக உயர்த்திக் கொள்ளலாம்," என்று தெரிவித்துள்ளார். அபிஷேக் சர்மா கடந்த இரு போட்டிகளில் முறையே 1 மற்றும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவசரப்பட்டு தேவையில்லாத ஷாட்களை ஆடி, ரன் எதுவும் சேர்க்க முடியாமல் இரண்டு முறையும் அவர் ஆட்டமிழந்துள்ளார்.
"உலகக் கோப்பை முதலே, ஒரு சில இன்னிங்ஸ்களைத் தவிர அவரது சர்வதேச ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. சாம்சன் உலகக் கோப்பையின் MVP வீரராக இருந்தார். அவருக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை, ஆனால் அபிஷேக்கிற்கு மட்டும் எப்படி தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன? இது மிகவும் நியாயமான கேள்வி. அபிஷேக்கிற்கு இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்படும் போது, சாம்சனுக்கு ஏன் இல்லை? ஒரு வீரருக்கு சாதகமாகவும், மற்றொரு வீரருக்கு பாதகமாகவும் ஏன் இந்த அணுகுமுறை நடக்கிறது?" என்று ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அபிஷேக் சர்மா உலகக் கோப்பையில் விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார், அவரது சராசரி 17.62 ஆகும். அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடிய 5 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தார், சராசரி 26.20 ஆகும். ஸ்ரீகாந்த் குறிப்பிட்டது போல, அபிஷேக் சர்மா ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வருகிறார்.


Click it and Unblock the Notifications

